இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. எப்போது?
2023-ன் முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரம் 20-ம் தேதி நிகழ்ந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் அடுத்த மாதம் நிகழவிருக்கிறது. சந்திரன் மற்றும் சூரியனுக்கு இடையில் பூமி வந்து, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுவதையே நாம் சந்திர கிரகணம் என்கிறோம். அடுத்த மாதம் மே 5-ம் தேதி இந்த சந்திர கிரகணம் நிகழவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சந்திர கிரகணமானது பெனும்பிரல் சந்திர கிரகணமாக நிகழவிருக்கிறது. மேலும், இதனை காணும் வாய்ப்பும் மிகவும் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் போது பூமியின் பெனும்பிரல் எனும் மிகவும் குறைவான பகுதியின் நிழல் மட்டுமே சந்திரனின் மீது விழும். எனவே, இந்த சந்திர கிரகணத்தை காண்பது அரிது.
எப்போது நிகழும், இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?
மே 5-ம் தேதி, இந்திய நேரப்படி இரவு 8.41 மணிக்குத் தொடங்கும் இந்த சந்திர கிரகணம், மே 6-ம் தேதி நள்ளிரவு 1.01 வரை நீடிக்கும். இரவு 10.52-க்கு உச்ச நிலையை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் சுமார் 4 மணி நேரம் 20 நிமிடங்களஅ நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து இந்த சந்திர கிரகணத்தைக் காண முடியாது. ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து பார்ப்பவர்களால் இந்த சந்திர கிரகணத்தை கண்டுகளிக்க முடியும். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மற்றொரு சந்திர கிரகணமும் நிகழவிருக்கிறது. அதுவும் பகுதி சந்திர கிரகணமாக நிகழுமாம்.