இன்று பூமியைக் கடந்து செல்லவிருக்கும் 'ஆபத்தான' சிறுகோள்- நாசா அறிவிப்பு
சூரிய குடும்பத்தின் அப்போலோ சிறுகோள் குடும்பத்தைச் சேர்ந்த '2020 FM6' என்ற சிறுகோள் (Asteroid) ஒன்று இன்று பூமியை மிக அருகில் கடந்து செல்லவிருக்கிறது. இந்த சிறுகோளை பூமிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வாய்ப்பைக் கொண்ட சிறுகோளாக அறிவித்திருக்கிறது நாசா. 4.6 பில்லியன் வரலாறு கொண்ட பூமியில் பல்வேறு சிறுகோள்கள் மற்றும் விண்கற்கள் மோதி குறிப்பிடத்தக்க அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அதில் முக்கியமானது 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக சிக்ஷூலப் சிறுகோள் மோதல். எனவே, பூமியை நெருங்கி வரும் சிறுகோள்கள் மற்றும் எரிகற்கள் குறித்து நாசாவின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பிரிவானது தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும்.
2020 FM6 சிறுகோள்:
அப்போலோ சிறுகோள் குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு சிறுகோள்கள் அவ்வப்போது பூமியை அருகில் கடப்பது வழக்கம். கடந்த வாரம் இதே குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு சிறுகோள்கள் பூமியை மிக அருகில் கடந்து சென்றன. ஆனால் அவை அளவில் 100 அடிக்கும் குறைவான அளவுடைய சிறிய சிறுகோள்கள். இன்று பூமியைக் கடக்கவிருக்கும் 2020 FM6 என்ற இந்த சிறுகோளோ, 500 அடி அகலமுடைய பெரிய சிறுகோளாக இருக்கிறது. 492 அடிகளுக்கு மேல் விட்டம் கொண்ட, பூமியிலிருந்து 7.5 மில்லியன் கிலோமீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில் பூமியைக் கடக்கிற சிறுகோள்களை, பூமிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புடைய சிறுகோள்களாகவே வகைப்படுத்துகிறது நாசா. இந்த சிறுகோளானது 5.9 மில்லியன் கிலோமீட்டர்களை தொலைவில் பூமியைக் கடந்து செல்லவிருப்பதால், இதனையும் அவ்வாறே வகைப்படுத்தியிருக்கிறது அவ்வமைப்பு.