உலக கல்லீரல் தினம் 2023: ஆல்கஹால் அற்ற கல்லீரல் கொழுப்பு நோய்க்கான காரணங்கள்
ஆண்டுதோறும், உலக மக்களுக்கு, கல்லீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடப்படுகிறது. சமீப காலங்களில், ஆல்கஹால்-அல்லாத கல்லீரல் கொழுப்பு நோய் (NAFLD), ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி, கல்லீரல் ஈரல் அழற்சி மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் மக்களை அதிகம் பாதிக்கின்றன. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் கொழுப்பு இருப்பதற்கான வழிமுறைகள் பற்றி நிபுணர்கள் கூறுவதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) இருப்பதற்கான பொதுவான காரணங்கள் உடல் பருமன், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் ஆகியவை ஆகும்.
NAFLD ஏற்பட காரணங்கள் என்ன? அதை தவிர்ப்பது எப்படி?
அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவு, ஜங்க் ஃபுட், கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்ற உணவுகளை உட்கொள்வது, கல்லீரலில் கொழுப்பை உருவாக்கும். உடற்பயிற்சியின்மை மற்றும் தற்போது இருக்கும் டிஜிட்டல் வாழ்க்கை முறை, கல்லீரலின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரல் கொழுப்பு இருப்பவர்கள், பெரும்பாலான நேரங்களில் எந்த அறிகுறிகளையும் அனுபவிப்பதில்லை. சில நேரங்களில், முகத்தில் லேசான வீக்கம், கழுத்து கருமை, ரோசாசியா, மஞ்சள் காமாலை, அரிப்பு மற்றும் வாயைச் சுற்றி வெடிப்பு ஆகியவை நேரிடும். இதை தவிர்க்க, வாழ்க்கை முறை மாற்றங்களும், தினசரி உடற்பயிற்சியும் அவசியம். உணவில், அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.