சர்வதேச ஹோமியோபதி தினம்: அதன் வரலாறையும், முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்க
ஆண்டுதோறும், ஏப்ரல் 10, அன்று சர்வதேச ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தையாக கருதப்படும் டாக்டர் சாமுவேல் ஹானிமனின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள ஹோமியோபதி மருத்துவத்தின் பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, இந்த மாற்று மருத்துவ முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். டாக்டர் சாமுவேல் ஹானிமன்,ஜெர்மனியின் மீசென் நகரில், 1755 இல் பிறந்தார். அதன் பின்னர், 1779 இல் மருத்துவப் பட்டம் பெற்றார். அவர், தனது காலத்தில் நிலவி வந்த மருத்துவ முறைகளில் அதிருப்தி அடைந்து, இந்த வகை மாற்று மருத்துவத்தை கண்டுபிடித்தார்.
ஹோமியோபதி மருத்துவம் எவ்வாறு வேலை செய்கிறது?
ஹோமியோபதி என்ற வார்த்தை, கிரேக்க வார்த்தைகளான "ஹோமியோ" மற்றும் "பாத்தோஸ்" ஆகியவற்றிலிருந்து வந்தது. ஹோமியோபதி மருத்துவத்தின் முக்கியமான நன்மைகளில் ஒன்று, இது பாதுகாப்பானது மற்றும் சைடு எபெக்ட் இல்லாதது. ஏனெனில் ஹோமியோபதி மருந்துகள், இயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஹோமியோபதி சிகிச்சையானது, நோயின் அறிகுறிகளைக் காட்டிலும், அதன் மூல காரணத்தை முதலில் குணப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஹோமியோபதி மருத்துவத்தின் செலவும் குறைவே. அரசாங்கத்தால், இதன் செயல்திறன் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இதன் நற்பலன்கள் மக்களிடையே போய் சேராத காரணத்தால், கடந்த 2005 முதல் சர்வதேச ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.