தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது?
உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே சேவை இந்தியாவில் தான் உள்ளது. இது நாள்தோறும் பல லட்சக்கணக்கான மக்களை அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. இருப்பினும் நம் பெரும்பான்மையானவர்களுக்கு, ரயில் குறித்து பல தெரியாத தகவல்கள் உள்ளன. அந்த வகையில், ஏசி பெட்டிகள் என் எப்போதுமே ரயிலில் நடுவில் இணைக்கப்படுகிறது, பொதுப் பெட்டிகள் என் ரயிலின் பின் மற்றும் முன் பகுதியில் இணைக்கப்படுகிறது என்பது குறித்த தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரயிலை சம நிலையில் வைக்க ஏசி பெட்டிகள் நடுவில் பொருத்தப்படுகிறது
ஏசி பெட்டிகளை ரயிலின் நடுவில் பொருத்த பல்வேறு காரணங்கள் குறிப்பிடுகிறது. அந்த வகையில் முக்கியமான காரணமாக ரயிலை சமநிலையாக வைக்கவே, ஏசி பெட்டிகள் நடுவில் பொருத்தப்படுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் அதிகமாக பொதுப்பெட்டியில் பயணிப்பதால் அப்பெட்டியை, நடுவில் இணைக்கும்போது பெரும்பான்மையான மக்கள் ரயிலின் நடுவில் திரள்வர், அப்போது ரயிலின் எடை சமநிலை இல்லாமல் போகும். இதனால் ரயிலுக்கும் அதில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் தான் பொதுப்பெட்டிகள் ரயிலின் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் இணைக்கப்படுகிறது.
ஏசி பெட்டிகளின் பயணிகளுக்கு வசதியை ஏற்படுத்த
இந்திய ரயில்வே இந்த செயல்பாட்டிற்கு குறிப்பிட்ட காரணத்தை குறிப்பிடவில்லை, ஆனால் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு எளிதான மற்றும் வசதியான பயணத்தை வழங்கவே, இந்நடைமுறை பின்பற்றப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். லக்கேஜ் பெட்டிகள், அதைத் தொடர்ந்து ஜெனரல் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகள் ரயிலின் இருபுறமும் இருப்பதால், பெரும்பாலான கூட்டம் பிரிந்து செல்வதால், நடுவில் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் குறைவான கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், பெரும்பாலான ரயில் நிலையங்களில் ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லும் வழி, ஏசி பெட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும் பகுதிக்கு அருகில் இருப்பதால், அப்பயணிகள் எளிதாக வெளியேற முடிகிறது.
நீராவி இன்ஜின்கள் காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை
மேலும் சிலர் இதற்கு காரணமாக பழைய நடைமுறையை சொல்கிறார்கள். முன்னர் இருந்த நீராவி ரயில் என்ஜின்கள் மற்றும் அதன் பின் வந்த டீசல் ரயில் இன்ஜின்கள் கடுமையான ஒலி எழுப்பும். இதனால், அதிக கட்டணம் செலுத்தி ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அந்த சத்தம் இடையூறு ஏற்படுத்தாத வண்ணம், அப்பெட்டிகள் ரயிலின் நடுவில் பொருத்தப்பட்டதாகவும், அந்த நடைமுறையே தற்போதும் பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.