
தமிழ் புத்தாண்டு உண்மையில் எப்போது: சித்திரை மாதமா? தை மாதமா?
செய்தி முன்னோட்டம்
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை, தமிழ்நாடு மட்டுமின்றி, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை என உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கொண்டாடுவது வழக்கம்.
தமிழ் வருடபிறப்பு அன்று மா, பலா, வாழை என முக்கனிகளுடன், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி, பொன்பொருள் ஆபரணங்களுடன் இறைவனை வழிபாடு செய்து, அந்த நாள் முதல் ஆண்டு அமோகமாக இருக்க வேண்டும் என பிராத்தனை செய்வது வழக்கம்.
மதவேறுபாடு இன்றி இந்த நாளை கொண்டாடுவார்கள் தமிழர்கள்.
சங்க இலக்கியங்களில் கூட சித்திரை துவங்கி ஆண்டை, ராசிகளாக தொகுப்பது வழக்கமாக பார்க்கப்படுகிறது.
எனினும், ஏப்ரல் 14 தான் தமிழ் புத்தாண்டா என்ற கேள்வி பலருக்கும் எழுவதன் காரணம், அரசியல் குழப்பங்களே!
அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
மரபு
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதா?
தமிழ் புரவலர்கள் ஏப்ரல் 14ஆம் தேதி வரும் சித்திரை மாதத்தை தமிழ் புத்தாண்டாகக் கருத வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறினாலும், திராவிட சித்தாந்தத்தை ஆதரிப்பவர்கள் தை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
மேலும், தமிழ் புத்தாண்டு என்ற ஒன்றை தமிழர்கள் கொண்டாடியதாக தமிழ் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் எந்த சான்றும் இல்லை.
எனினும், தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கலை தமிழர்கள் கொண்டாடியதற்கான சான்றுகள் பல உள்ளன.
இந்த குழப்பம் ஒருபுறம் இருக்க தமிழ் வரலாற்றாசிரியர்களில் ஒரு பகுதியினர் மற்றொரு கருத்தைச் சேர்த்துள்ளனர். தமிழ் புத்தாண்டு தைப்பூசத்திற்கு முந்தைய நாளில் கொண்டாடப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
அரசியல் விளையாட்டு
திராவிட கட்சிகளும், தமிழ் புத்தாண்டும்
1972ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, திருவள்ளுவர் ஆண்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி, தை முதல் நாளை புத்தாண்டாக அறிவிக்க நினைத்தார்.
"ஆரியர்களால் உருவான புத்தாண்டை விடுத்து, தமிழர்களின் நாளை புத்தாண்டாக அறிவிக்க" அவர் விரும்பினார்.
2006ஆம் ஆண்டில் ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராக பதிவியேற்ற கருணாநிதி தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்து அரசாணையையும் வெளியிட்டார்.
அன்றிலிருந்து அனைத்து மாநில அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்தப்படுகிறது.
அப்போதிருந்து 'திருவள்ளூர் தினம்' ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அதற்கு அடுத்த தேர்தலில் வெற்றிபெற்ற அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுகவின் புத்தாண்டு அறிவிப்பை புறக்கணித்து, சித்திரை முதல் நாளை மீண்டும் புத்தாண்டாக அறிவித்தார்.
ஜோதிடம்
வரலாற்றில் தமிழ் புத்தாண்டு மற்றும் ஜோதிட சாசனங்கள் கூற்று
ஜோதிட சாஸ்திரத்தின்படி முதல் ராசியான மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் நாளையே புத்தாண்டு என்று ஜோதிடம் கூறுகிறது.
அது சித்திரை முதல் நாளில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதை பண்டைய நூல்களும் குறிப்பிட்டதை ஏற்கனவே பார்த்தோம்.
எனினும், தமிழ் புத்தாண்டு என குறிப்பாக ஒரு நாளை பண்டைய காலத்தில் கொண்டாடியதற்கான போதிய சான்றுகள் இல்லை.
தமிழ் மரபில் அனைத்து மாதங்களிலும் ஏதேனும் ஒரு நாளை குறிப்பிட்டு கொண்டாடிதான் வந்துள்ளோம்.
தை மாதத்திற்கு பொங்கல், ஆடி மாதத்திற்கு ஆடிப்பெருக்கு, கார்த்திகை மாதத்திற்கு கார்த்திகை தீபம் என மக்கள் அனைத்து மாதங்களையும் பாரபட்சமின்றி கொண்டாடினர் என்பதே உண்மை.