ஆசிட் ரிஃப்ளெக்ஸ் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள்
இந்தியாவில் 20 முதல் 30% பேருக்கு ஆசிட் ரிஃப்ளெக்ஸ் (Acid Reflux) ஏற்படுவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எப்போதாவது இந்நோய் ஏற்படுவது பொதுவானது என்றாலும், சிலருக்கு இது வழக்கமான எப்போதும் ஏற்படுகிறது. சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படும் இது, கவனிக்கப்படாமல் விட்டால் பல இணை நோய்களை உண்டாக்கும் அபாயம் உள்ளது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், நோய் பாதித்தவர்கள் சாப்பிடக்கூடிய, சாப்பிடக்கூடாத உணவு வகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆசிட் ரிஃப்ளெக்ஸ் எதனால் ஏற்படுகிறது?
இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) என்பது, இரைப்பையில் இருந்து உணவு குழாய்க்கு, உணவு மேல் நோக்கி தள்ளப்படும் போது ஏற்படுகிறது. இரைப்பையில் உள்ள அமில திரவங்கள், உணவு குழாயின் சீதமென் சவ்வுவை பாதிப்பதால் இந்நோய் தீவிரமடைகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படலாம். நோய் ஏற்பட காரணங்கள் என்ன? சில மருந்துகள் இரைப்பை- உணவக் குழாயை தளர்வடையச் செய்வதாகவும், அந்த மருந்துகளின் தொடர்ச்சியான பயன்பாடு, இந்த நோயை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இது தவிர, புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன், தோல் தடிப்பு நோய் உள்ளிட்டவையும் இந்த நோயை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
உடலில் என்னென்ன பிரச்சனைகளை இது ஏற்படுத்தும்?
இந்த நோய்க்கு முறையாக சிகிச்சை வழங்காத பட்சத்தில், பல்வேறு நோய்களை உண்டாக்கும் என கூறப்படுகிறது. மூச்சு குழல் இறுக்கம், குரல் கரகரப்பு, பல் பிரச்சனைகள், உணவுக் குழல் புற்றுநோய், உணவு குழல் சுருக்கம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படலாம். அறிகுறிகள் என்ன? இந்நோயின் அறிகுறிகளாக நெஞ்செரிச்சல், உணவு குழாயில் அமிலம் மேல் நோக்கி தள்ளப்படுவது, தொண்டையில் விழுங்குவதில் சிரமம் உள்ளிட்டவை கூறப்படுகிறது. எனினும் பெரும்பான்மையான மக்கள், நெஞ்செரிச்சலை வைத்தே, இந்நோயை கண்டறிகிறார்கள்.
தீர்வுகள் என்ன?
பல்வேறு மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இந்த நோய்க்கு தீர்வு காணப்படுகிறது. இருப்பினும், வருமுன் காக்க உணவு மற்றும் உறங்கும் பழக்கங்களை மாற்றிக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்கள் இடது பக்கம் தூங்குவதும், உடம்பின் மேல் பாகம் உயரமாக இருக்கும் படி, தலையணையை வைத்து உறங்குவதும் இதற்கு உதவும் என்கிறார்கள். இது மட்டுமன்றி, சில உணவுகளையும் தவிர்க்க அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஆசிட் ரிஃப்ளெக்ஸ் நோய் ஏற்படாமல் தடுக்க எதை உண்ணலாம்?
அமிலப் பின்னோட்ட நோய் ஏற்பட்டவர்கள், ஓட்ஸ், கற்றாழை, பெருஞ்சீரகம், பாகற்காய், வெள்ளரிப்பழம், வாழைப்பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆசிட் ரிஃப்ளெக்ஸ் ஏற்பட்டவர்கள் எதை உண்ணக்கூடாது? காப்பி, தேநீர், வருத்த மற்றும் கொழுப்பு மிகுந்த உணவுகள், சிட்ரஸ் அமில பழங்கள், மிட்டாய்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், மது அருந்துவது, புகை பிடிப்பது, தக்காளி மற்றும் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே இந்த உணவுகளில் உள்ள அதிக காரத்தன்மை மற்றும் குறைந்த அமிலத்தன்மை, ஆசிட் ரிப்லெக்ஸ் ஏற்பட தூண்டுவதோடு, அந்நோய் ஏற்பட்டவர்களுக்கு பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது. அதிக அமிலத்தன்மை உடைய வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றை உண்ணும் போது, இந்நோயை தடுக்க முடிகிறது.