மழைக்காலத்தில் பொதுவாக நம்மை பாதிக்கும் வைரஸ் காய்ச்சல்கள் எவை?
பொதுவாகவே பருவகால மாற்றத்தின் பொது, வியாதிகள் நம்மை தாக்கும். குறிப்பாக மழைக்காலத்தில், வைரஸ் கிருமிகள் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்பதால் மழைக்காலத்தின் போது, வைரஸ் காய்ச்சல் பரவுதல் அதிகரிக்கும். அதிலும் தற்போது சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதாலும், மழை நீர் தேங்கி இருப்பதாலும், தொற்று நோய் அதிகம் அபாயம் உள்ளது. உங்களுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூக்கில் நீர் வடிதல், உடல் வலி மற்றும் சோர்வாக இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இது போன்ற சமயங்களில் உடனே மருத்துவரை அணுகி உரிய மருந்துகள் எடுத்துக்கொள்வது அவசியம். வைரஸ் காய்ச்சலின் வகைகளையும், அதிலிருந்து உங்களை தற்காக்கும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.
டெங்கு
மழைக்காலம் வந்தாலே டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும். ஏடிஸ் என்ற கொசு வகைகளால் இந்த காய்ச்சல் பரவுகிறது. தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் இதனுடன் ரத்தப்போக்கு, உடலில் சிராய்ப்பு போன்றவை இதன் அறிகுறிகளாகும். உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். அதனால் சூப், ஜூஸ், குடிநீர் போன்றவற்றுடன் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் டெங்கு நோயை விரட்டலாம்.
மலேரியா, சிக்குன்குனியா
இந்த காய்ச்சலும் கொசு கடிப்பதால் பரவுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் கடுமையாக குளிர் அடிப்பது, நடுக்கம், தலைவலி, உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும். சில நேரங்களில் தலைசுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகளும் தென்படும். உடனடியாக சிகிச்சை எடுக்காவிட்டால், மூளையில் பாதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், உறுப்புகள் பாதிக்கப்படுவது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும். சிக்குன்குனியா: இதுவும் கொசு மூலமாக பரவும் காய்ச்சல் தான். இந்த வைரல் தொற்றால் திடீரென காய்ச்சல் அதிகரிக்க தொடங்கி, தலைவலி, தசைகளில் வலி, கால் மூட்டுகளில் வலி, சோர்வு போன்றவை ஏற்படும்.
டைஃபாய்டு, எலிக்காய்ச்சல்
சால்மோனெல்லா டைபி என்ற பாக்டீரியா தொற்றால் இந்த டைஃபய்டு காய்ச்சல் பரவுகிறது. இவை பொதுவாக அசுத்தமான உணவு மற்றும் சுத்தமில்லாத குடிநீர் மூலம் பரவுகிறது. இந்த வகை காய்ச்சலுக்கும், தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், பசியின்மை, சோர்வடைதல் போன்ற அறிகுறிகள் தென்படும். எலிக்காய்ச்சல்: பாக்டீரியா தொற்றால் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. மாசடைந்த நீர் அல்லது மண் மூலமக இந்நோய் நமக்கு பரவுகிறது. குறிப்பாக வெள்ளம் அதிகமாக தாக்கும் பகுதிகளில் இந்நோய் அதிகம் தாக்கும். தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி, தசைகளில் வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
இத்தகைய பருவகால காய்ச்சலில் இருந்து உங்களை தற்காத்துக்கொள்ள வேண்டுமென்றால், உங்கள் சுற்றுபுறத்தை முதலில் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்க விடாதீர்கள். அசுத்தமான உணவுகள் மற்றும் தண்ணீரை அப்புறப்படுத்திவிடுங்கள். உங்களை நீறேற்றமாக வைத்திருங்கள். அடிக்கடி கையை சுத்தம் செய்யுங்கள். வீடுகளுக்குள் கொசுக்கள் புகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் அதோடு, ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து உண்ணுங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் பயிர் வகைகளை தினசரி சேர்த்துக்கொள்ளுங்கள்.