கணைய புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை 90% நோயாளிகளிடம் தடுத்து நிறுத்திய புதிய மருந்து: மருத்துவ ஆய்வில் தகவல்
செய்தி முன்னோட்டம்
கணைய புற்றுநோய்க்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள டராக்சன்ராசிப் என்ற புதிய இலக்கு மருந்து 90 சதவீத நோயாளிகளின் உடலில் கட்டிகள் வளர்வதைத் தடுத்து நிறுத்தியுள்ளது. உடலின் பிற பகுதிகளுக்குப் பரவிய முற்றிய கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 61 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 60 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு புற்றுநோய் கட்டிகள் சுருங்கியதோடு சுமார் 8 சதவீத நோயாளிகளின் ஸ்கேனில் புற்றுநோய் முழுமையாக மறைந்துள்ளது. சிகிச்சை தொடங்கிய ஓராண்டிற்கு பிறகு 76.6 சதவீத நோயாளிகள் உயிருடன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டராக்சன்ராசிப் செயல்பாடு
கணைய புற்றுநோயின் 90% காரணியான KRAS புரதத்தை முடக்கும் டராக்சன்ராசிப் செயல்பாடு
வயிற்றின் ஆழத்தில் கணையம் அமைந்துள்ளதால் மஞ்சள் காமாலை மற்றும் எடை இழப்பு போன்ற அறிகுறிகள் தெரிவதற்குள்ளேயே புற்றுநோய் முற்றிய நிலையை அடைந்து விடுகிறது.
பொதுவான கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு KRAS என்ற மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டு கட்டிகள் வேகமாக வளர்கின்றன.
டராக்சன்ராசிப் மருந்தானது இந்த அசாதாரண RAS மற்றும் KRAS புரதங்களுடன் இணைந்து அவற்றின் வளர்ச்சி சமிக்ஞைகளை நிறுத்துவதன் மூலம் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.
நோயாளிகள்
முந்தைய 500 நோயாளிகள் ஆய்வில் இருமடங்கு உயிர்வாழ்வு மற்றும் FDA ஒப்புதல்
முன்னதாக சுமார் 500 முற்றிய கணையப் புற்றுநோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் டராக்சன்ராசிப் பெற்றவர்கள் சராசரியாக 13.2 மாதங்கள் உயிர் வாழ்ந்துள்ளனர்.
இது வழக்கமான கீமோதெரபி சிகிச்சை பெற்றவர்களின் சராசரி உயிர்வாழ்வுக் காலமான 6.7 மாதங்களை விட கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமாகும்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2026-ல் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் நவம்பர் மாதம் ஐரோப்பிய அமைப்பும் இம்மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
இது முழுமையான குணமளிப்பு அல்ல
நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய்களுக்கும் ஆய்வு
ஸ்கேனில் கட்டி தெரியவில்லை என்றாலும் நுண்ணிய புற்றுநோய் செல்கள் எஞ்சியிருக்க வாய்ப்புள்ளதால் இம்மருந்தை இன்னும் முழுமையான குணமளிப்பு எனக் கூற முடியாது என மருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
புற்றுநோயை எவ்வளவு காலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதை அறிய பல ஆண்டுகள் தொடர் கண்காணிப்பு அவசியம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல் KRAS மரபணு மாற்றங்கள் நுரையீரல், குடல் மற்றும் கருப்பை புற்றுநோய்களிலும் உள்ளதால் அந்நோய்களுக்கும் டராக்சன்ராசிப் பயனளிக்குமா என ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.