
குழந்தைகளை வெயிலில் இருந்து பாதுகாக்க இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பல இடங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.
கோடைக்கால வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவிலும் நீர் சத்து குறையக்கூடிய அபாயம் இருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, குழந்தைகளுக்கு இரவிலும் அடிக்கடி குடிக்க தண்ணீர் அவசியம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர மேலும் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக அதன்படி, பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், செல்லும் பொழுது குடிநீர் பாட்டில், குடை போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.
அறிவுறுத்தல்
சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவுறுத்தல்
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின்படி,"பகலின் வெப்பம் போன்று, இரவிலும் சூடான காற்று காரணமாக உடலில் நீர் சத்து குறைவதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பாக, குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தபோதும் வாய், நாக்கு வறண்டு விடும். பெரியவர்கள் தாகம் ஏற்பட்டால் தானாக தண்ணீர் குடித்துவிடுவர். ஆனால் குழந்தைகள் தாங்களே தண்ணீர் கேட்பது அரிது. எனவே, பெற்றோர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது அவசியம்." என தெரிவித்துள்ளது.
அதேபோல், ஏசி வசதி இல்லாத வீடுகளில் வசிப்பவர்கள் தினமும் இரு முறை குளிப்பதும், சிறியவர்களுக்கு உடல்சூட்டை தவிர்க்கும் வகையில் சீரான தண்ணீர் அளவை உறுதி செய்வதும் முக்கியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீரிழப்பு
நீரிழப்பு விளைவுகள் பற்றியும் சுகாதாரத்துறை எச்சரிக்கை
தண்ணீர் போதியளவில் அருந்தவில்லை என்றால், உடலில் ஏற்படும் அசௌகரியங்கள் பற்றியும் சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது.
அதன்படி,
தசைப்பிடிப்பு
தலைவலி
தலைச்சுற்றல்
சிறுநீர் சிக்கல் போன்ற உடல்நிலை பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்றும், நீடித்த நீரிழப்பு காரணமாக மூளை, சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தாகம் இல்லாவிட்டாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சராசரியாகக் குடிநீர் அருந்த வேண்டும். தினமும் இரு வேளை குளிப்பதும் தவறக்கூடாது" என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.