உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தினசரி உணவு முறையில் அரிசியின் பயன்பாடு இல்லாத நாளே இல்லை எனக்கூறும் அளவிற்கு அரிசியை அதிக அளவில் மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், தென்னிந்தியாவில் மட்டும்தான் அரிசி மிக அதிக அளவில் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறதா? தமிழ்நாட்டில் பிரபலமாக உள்ள பச்சரிசி, புழுங்கல் அரிசி, சீரக சம்பா போன்றவற்றை தாண்டி, வேறு சில அரிசி வகைகளும் உலகில் பிரபலமாக உள்ளது. உலகம் முழுவதிலுமே பல்வேறு கலாச்சாரங்களிலும், சமூகங்களிலும் அரிசி இன்னும் பிரதான உணவாகவே இருந்து வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உலகமுழுவதும் இதற்காக பயிரிடப்படுகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சில அரிசி வகைகள், அவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் உணவு வகைகள் குறித்து இதில் பார்க்கலாம்.
மல்லிகை அரிசி
இந்த வகை அரிசிகள் தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. சாதாரண அரிசியைப் போலவே இருக்கும் இந்த அரிசியை வேகவைக்கும் அசிட்டைல் பைரோலின் என்னும் வேதிப்பொருள் ஆவியாகி மல்லிகையின் நறுமணத்தைக் கொடுப்பதால் இந்த பெயர் வந்துள்ளது. பசை போல் ஓட்டும் தன்மையையும் கொண்டுள்ள இந்த அரிசி செரிமான ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் வாய்ப்பை குறைத்தல் போன்ற எண்ணற்ற மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இது தாய் பச்சை கறி, ஸ்டிர்-ஃப்ரைஸ் மற்றும் பல்வேறு தாய் மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவு வகைகளுக்கு ஒரு சைடு-டிஷ்ஷாக பயன்படுத்தப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இதன் விலை மலிவாக இருந்தாலும், இதன் சிறப்பம்சங்களால் உலகின் மற்ற பகுதிகளில் சற்று கூடுதல் விலையுடன் விற்கப்படுகிறது.
நீண்ட தானிய வெள்ளை அரிசி
பொதுவாக உலகம் முழுவதிலும் எளிதாக கிடைக்கிறது. நீண்ட தானிய வெள்ளை அரிசி பரந்த அளவிலான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் அமெரிக்க-பாணி அரிசி உணவுகள், சீன ஸ்டிர்-ஃப்ரைஸ் மற்றும் பல்வேறு சர்வதேச உணவு வகைகள் ஆகியவை அடங்கும். உலகம் முழுவதும் கிடைப்பதால் இதன் விலை மிகவும் மலிவாக உள்ளது. குறுகிய தானிய அரிசி: கிழக்கு ஆசியாவில், குறிப்பாக ஜப்பான் மற்றும் கொரியாவில் இது பிரபலமானது. இந்த அரிசி சமைக்கும் போது ஒட்டும் தன்மை கொண்டது மற்றும் சுஷி, ரைஸ் பால்ஸ் போன்ற உணவுகளிலும், பிபிம்பாப் போன்ற பல கொரிய உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை தரம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து விலைகள் மாறுபடலாம் என்றாலும் இது பொதுவாக மலிவானது.
ஆர்போரியோ அரிசி
இந்த வகை அரிசிகள் இத்தாலியில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. ஆர்போரியோ அரிசி அதிக ஸ்டார்ச் கொண்டதற்காக அறியப்படுகிறது மற்றும் இது கிரீமி ரிசொட்டோ உணவுகளுக்கு ஏற்றதாக அமைகிறது. ரிசொட்டோ உணவுகளில் அதன் சிறப்புப் பயன்பாடு காரணமாக, வழக்கமான வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது இது பெரும்பாலும் விலை அதிகம். காட்டு அரிசி: இந்த வகை அரிசிகள் வட அமெரிக்க பிராந்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு முழுமையான அரிசி அல்ல. புல் வகையை சேர்ந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இதை மற்ற தானியங்களுடன் கலந்து சைடு-டிஷ்ஷாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சாதாரண அரிசி வகைகளுடன் ஒப்பிடும்போது இதன் விலையும் ஒப்பீட்டளவில் அதிகமாகும்.
பாஸ்மதி அரிசி
பிரியாணி என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருவது பாஸ்மதி அரிசி தான். இது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அண்டை நாடுகள் என தெற்காசியாவில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. பாஸ்மதி அரிசி அதன் நீண்ட, மெல்லிய வடிவம் மற்றும் மென்மையான வாசனைக்கு பிரபலமானது. இது பொதுவாக பிரியாணி, பிலாஃப் மற்றும் பிற இந்திய மற்றும் மத்திய கிழக்கு உணவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை பாஸ்மதி அரிசியின் பிரீமியம் தரம் காரணமாக மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடும்போது பொதுவாக விலை அதிகம். பிராண்ட் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் விலைகள் பரவலாக மாறுபடும்.
ஒட்டும் (ஒட்டு) அரிசி
இந்த வகை அரிசிகள் தென்கிழக்கு ஆசியா, சீனா மற்றும் ஜப்பானில் அதிகம் கிடைக்கிறது. தாய் மாம்பழ ஸ்டிக்கி ரைஸ், சீன சோங்ஸி (ஒட்டும் அரிசி பாலாடை) மற்றும் ஜப்பானிய மோச்சி போன்ற உணவுகளில் ஒட்டும் அரிசி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் விலைகள் பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடும். எனினும் மேலே குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இந்த வகை அரிசிகள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. உலகம் முழுவதும் மேலே குறிப்பிட்டவற்றைப் போல் பல்வேறு பாரம்பரிய அரிசிகள் பிரபலமாக இருந்தாலும், நோய் பாதிக்காத தன்மை மற்றும் அதிக மகசூல் கொடுக்கக் கூடிய புதுப்புது நெல் வகைகளையும் விஞ்ஞானிகள் ஒருபுறம் உருவாக்கி வருகின்றனர்.