LOADING...
அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? தற்காத்துக்கொள்வது எப்படி?
அமோனியா வாயு கசிவு காரணமாக 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அமோனியா கசிவால் பாதிக்கப்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? தற்காத்துக்கொள்வது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 22, 2026
10:39 am

செய்தி முன்னோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்காரணை பகுதியில் உள்ள ஒரு தனியார் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிப்பு

அமோனியா வாயு மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது?

அமோனியா வாயு காற்றில் அதிக அளவில் கலக்கும்போது, அது மனித உடலில் பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. லேசான கசிவிற்கே கண்கள், தோல், தொண்டை மற்றும் நுரையீரலில் கடுமையான எரிச்சலையும் புண்களையும் ஏற்படுத்தும். தோலில் வலிமிகுந்த கொப்புளங்கள் உருவாகும். இந்த அமோனியா காற்றை சுவாசிப்பதால் தொண்டை வீங்கி சுருங்குவதால் சுவாசிப்பது கடினமாகும். கடுமையான இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தி மரணத்திற்கும் வழிவகுக்கும். தீவிர பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு நுரையீரலில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் சுவாசக் குறைபாடு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியான அமோனியா வாயுவை சுவாசித்தவர்களுக்கு நாள்பட்ட இருமல், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தழும்புகள் போன்ற நீண்ட கால ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம்.

சிகிச்சை

இதற்கான சிகிச்சை மற்றும் முதலுதவி என்ன?

அமோனியா வாயு பாதிப்புக்கு என்று பிரத்யேக மாற்று மருந்து எதுவும் கிடையாது. மருத்துவர்கள் உடலில் இருந்து அமோனியாவை அகற்றிவிட்டு, அறிகுறிகளுக்கு ஏற்ப ஆதரவு சிகிச்சைகளை மட்டுமே வழங்குவார்கள். வாயு கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்: ஆடைகளை அகற்றுதல்: பாதிக்கப்பட்டவர் அணிந்திருக்கும் ஆடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆடைகளைத் தலை வழியாகக் கழற்றக் கூடாது (அது வாய் மற்றும் கண்களில் மேலும் வாயு படர வழிவகுக்கும்). தேவைப்பட்டால் கண்களையும் வாயையும் மூடிக்கொண்டு கழற்ற வேண்டும். உடலை கழுவுதல்: உடல் முழுவதையும் வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்பு கொண்டு நன்றாகக் கழுவ வேண்டும். கண்களை சுத்தம் செய்தல்: கண்களை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

Advertisement

பயன்பாடு

அமோனியா எதற்கெல்லாம் பயன்படுகிறது?

அமோனியா பொதுவாக உரங்கள், பிளாஸ்டிகள், வெடிபொருட்கள், வீட்டு உபயோக துப்புரவுப் பொருட்கள் மற்றும் தோல் பதனிடும் தொழிலகங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களில் ஐஸ் கட்டிகள் தயாரிப்பதற்கும், பொருட்களைக் குளிர்ச்சியாக வைப்பதற்கும் இது குளிர்பதன வாயுவாக பயன்படுத்தப்படுகிறது. முன்னதாக, 2022-ல் உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில் உள்ள இறைச்சி தொழிற்சாலையிலும், அதற்கு முன் ஹரியானாவின் குளிர்பதனக் கிடங்கிலும் இது போன்ற அமோனியா வாயு கசிவு விபத்துகள் ஏற்பட்டுப் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement