திருவள்ளூரில் பயங்கரம்! இறால் தொழிற்சாலையில் திடீர் அமோனியா வாயு கசிவு! நுரையீரல் வீங்கி 7 பேர் பரிதாப பலி
செய்தி முன்னோட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று (ஜூன் 21) காலை திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு விபத்து நேரிட்டுள்ளது. இந்த நச்சு வாயு கசிவின் காரணமாகத் தொழிற்சாலையில் பணியில் இருந்த 70 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 7 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நச்சு வாயு கசிவு
நச்சு வாயுவின் தாக்கத்தால் மயங்கி விழுந்த தொழிலாளர்கள்
விபத்து நடந்த இந்தத் தனியார் தொழிற்சாலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்குக் கடுமையான மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் வாய், மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டுப் பலரும் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தனர்.
உயிரிழப்புகள்
நுரையீரல் வீக்கத்தால் ஏற்பட்ட அடுத்தடுத்த உயிரிழப்புகள்
தகவலறிந்து வந்த பெரியபாளையம் போலீசாரும், தீயணைப்புப் படையினரும் தொழிலாளர்களை மீட்டு மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவமனை மற்றும் செங்குன்றம் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். உடல்நிலை மிக மோசமாக இருந்தவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அமோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால் நுரையீரல் வீங்கி கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, வேல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐசியூ
ஐசியூ பிரிவில் 23 பேர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு
தற்போது பல்வேறு மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் 23 தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டு உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 9 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததுடன், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காவல்துறை விசாரணை
பாதுகாப்பு விதிமுறைகள் குறித்துக் காவல் துறை தீவிர விசாரணை
இந்த விபத்து தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாமல் போனதா என்பது குறித்துக் காவல்துறையினரும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையில் உள்ள அமோனியா சிலிண்டர்கள் மற்றும் குழாய்களின் தரம் குறித்தும், அவசர கால பாதுகாப்பு உபகரணங்கள் அங்கு செயல்பாட்டில் இருந்தனவா என்பது குறித்தும் அதிகாரிகள் தற்போது கள ஆய்வு மேற்கொண்டு சான்றுகளை சேகரித்து வருகின்றனர்.
உயர்மட்ட விசாரணை
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைத்துள்ள உயர்மட்ட விசாரணைக் குழு
அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் உயிரிழந்த கொடூரச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சாந்தாராம் தலைமையில் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்ததற்கான உண்மையான காரணங்கள் குறித்துத் தீவிரமாக விசாரித்து, விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.