தமிழ்நாடு வானிலை அப்டேட்: ஆகஸ்ட் 11 வரை கொட்டப்போகும் மழை; வானிலை மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ உயரத்திலும், தென் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ முதல் 7.6 கி.மீ உயரம் வரையிலும் இரு வளிமண்டல சுழற்சிகள் நிலவி வருகின்றன. மேலும் வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுகிறது.
கனமழை
தென் மாவட்டங்கள் மற்றும் மலைப் பகுதிகளுக்குக் கனமழை எச்சரிக்கை
இன்று (06-08-2026) மற்றும் நாளை (07-08-2026) ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று தென் தமிழகத்தின் தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வட மாவட்டங்கள்
சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மிதமான மழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை மாவட்டங்கள், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், வட கடலோரப் பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நகரில் அதிகபட்ச வெப்பநிலையானது 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலையானது 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.