135 ஆண்டுகால பிரிட்டிஷ் கால சட்டம் ரத்து! டிஜிட்டல் வங்கிப் பதிவுகளுக்கு நீதிமன்ற அங்கீகாரம்; மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றம்
செய்தி முன்னோட்டம்
வங்கி அமைப்பின் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஏற்ப, மின்னணு மற்றும் டிஜிட்டல் வங்கிப் பதிவுகளை நீதிமன்றங்களில் சட்டப்பூர்வ சான்றாதாரமாக ஏற்றுக்கொள்வதற்கான புதிய மசோதா மக்களவையில் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) நிறைவேற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட பழமையான 1891 ஆம் ஆண்டைய பேங்கர்ஸ் புக்ஸ் சான்றாதாரச் சட்டத்திற்கு பதிலாக, இந்த 'பேங்கர்ஸ் புக்ஸ் சான்றாதார மசோதா 2026' (Bankers' Books Evidence Bill, 2026) கொண்டு வரப்பட்டுள்ளது.
குரல் வாக்கெடுப்பு
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு
மக்களவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை பரிசீலனைக்கும் ஒப்புதலுக்குமாகத் தாக்கல் செய்தார்.
அவையை நடத்தும் தலைவரின் கோரிக்கையையும் மீறி எதிர்க்கட்சிகள் அமளியைத் தொடர்ந்ததால், எவ்வித விவாதமும் இன்றி இம்மாசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
வங்கிப் பதிவுகள்
விரிவடையும் 'வங்கிப் பதிவுகள்' வரையறை
தற்போதைய வங்கி முறையில் பதிவுகள் அனைத்தும் காகித வடிவத்திற்குப் பதிலாக நவீனத் தொழில்நுட்பம் மூலமே உருவாக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் இச்சட்டத்தின் கீழ் 'வங்கிப் பதிவுகள்' (Bankers' Books) என்பதற்கான வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வங்கிகளால் பராமரிக்கப்படும் காகித வடிவப் பதிவுகள் மட்டுமின்றி மின்னணு (Electronic), டிஜிட்டல் (Digital), வெர்ச்சுவல் (Virtual), கிளவுட் சார்ந்த (Cloud-based) மற்றும் பிற தொழில்நுட்ப அமைப்புகளில் சேமிக்கப்படும் அனைத்துப் பதிவுகளும் இனி சட்டப்பூர்வ சான்றாதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
முக்கிய அம்சங்கள்
புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் பலன்கள்
இந்தப் புதிய சட்டம், மின்னணு மற்றும் டிஜிட்டல் கையொப்பங்கள் மூலம் வங்கிப் பதிவுகளைச் சான்றளிக்கும் தரப்படுத்தப்பட்ட முறையை அறிமுகப்படுத்துகிறது.
மேலும், வங்கி நேரடியாகச் சம்பந்தப்படாத சட்ட நடவடிக்கைகளில், நீதிமன்றம் சிறப்பு உத்தரவு பிறப்பித்து வங்கி அதிகாரிகளைச் சாட்சியமளிக்க அழைக்கக்கூடிய 'சிறப்புக் காரணம்' (Special Cause) என்ற பிரிவையும் இது தெளிவாக வரையறுக்கிறது.
இச்சட்டம் நிதித் துறையில் செயல்படும் பிற அமைப்புகளுக்கும் மத்திய அரசால் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.