வெறும் 700 கிராம் எடையில் மாறிய ஆட்டம்! ஆசிய விளையாட்டு MMA போட்டியில் தங்க வாய்ப்பை இழந்த இந்திய வீராங்கனை
செய்தி முன்னோட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 60 கிலோ பிரிவு கலப்புத் தற்காப்புக் கலை (MMA) போட்டியில், இந்தியாவின் 36 வயது வீராங்கனை சுசிகா தரியால் வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். இந்திய MMA வரலாற்றில் ஆசிய விளையாட்டில் வெல்லப்படும் முதல் பதக்கம் இதுவாகும். இருப்பினும், இறுதிப் போட்டிக்கு முன்னேறித் தங்கம் வெல்லும் வாய்ப்பை ஒரு வித்தியாசமான விளையாட்டு விதிமுறையால் அவர் நழுவவிட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரையிறுதி
சிங்கப்பூர் வீராங்கனையுடன் கடுமையாக மோதிய அரையிறுதி ஆட்டம்
அரையிறுதியில் சிங்கப்பூரின் ஹுய் ஹூன் டீயோவை எதிர்கொண்ட சுசிகா, தனது ஜூடோ திறமையைப் பயன்படுத்தி எதிராளியை கீழே வீழ்த்தி அபாரமாக விளையாடினார்.
முதல் சுற்றை சிங்கப்பூர் வீராங்கனையும், இரண்டாவது சுற்றை சுசிகாவும் கைப்பற்றியதால் கூடுதல் நேரமாக 1 நிமிடம் ஒதுக்கப்பட்டது.
கூடுதல் நேரத்திலும் இருவரும் சம பலத்துடன் மோதியதால், ஆட்டத்தின் முடிவை நடுவர்களால் உடனடியாக அறிவிக்க முடியவில்லை.
இதனால் போட்டி சமனில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
எடை வித்தியாசம்
700 கிராம் எடை வித்தியாசம் வைத்த அதிர்ச்சித் திருப்பம்
போட்டி சமனில் முடிந்ததால், இந்திய குழுவின் மேல்முறையீட்டிற்கு பிறகு விதிமுறைகளின்படி வெற்றியாளரை தீர்மானிக்க காலையில் எடுக்கப்பட்ட வீராங்கனைகளின் உடல் எடை சரிபார்க்கப்பட்டது.
இதில் சிங்கப்பூர் வீராங்கனை டீயோ, இந்திய வீராங்கனை சுசிகாவை விட 700 கிராம் எடை குறைவாக இருந்தார்.
ஆசிய MMA விதிகளின்படி, போட்டி சமனானால் குறைந்த எடை கொண்ட வீராங்கனையே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்ற விதியின் கீழ் சிங்கப்பூர் வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வெறும் 700 கிராம் எடை வித்தியாசத்தால் தங்கப் பதக்க வாய்ப்பை இழந்த சுசிகா, மைதானத்திலேயே கண்ணீர் விட்டுத் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.