Loading...
5 மாதங்களில் ரூ.30,021 கோடி கடன், வட்டிக்கு மட்டுமே ரூ.25,991 கோடி செலவு! தமிழக அரசின் நிதிநிலை குறித்த அதிர்ச்சி புள்ளிவிவரங்கள்
தமிழக அரசின் நிதிநிலை குறித்த அதிர்ச்சி புள்ளிவிவரங்கள்

5 மாதங்களில் ரூ.30,021 கோடி கடன், வட்டிக்கு மட்டுமே ரூ.25,991 கோடி செலவு! தமிழக அரசின் நிதிநிலை குறித்த அதிர்ச்சி புள்ளிவிவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2026
04:09 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசின் நடப்பு நிதியாண்டுக்கான (2026-27) வரவு செலவு தொடர்பான முக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் 5 மாதங்களில் அரசுக்கு ரூ.1,17,791 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில், மொத்த செலவு ரூ.1,38,140 கோடியாக இருந்துள்ளது. இதனால் இக்காலகட்டத்தில் ரூ.20,349 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சமாளிக்க அரசு ரூ.30,021 கோடி கடன் பெற்றுள்ளது.

வரி வசூல்

அரசின் வருவாய் ஆதாரங்கள் மற்றும் வரி வசூல் விவரங்கள்

முதல் 5 மாதங்களில் அரசுக்கு கிடைத்த ரூ.1,17,791 கோடி வருவாயில் மாநிலத்தின் சொந்த வரிகள், மத்திய அரசின் வரிப் பங்கு மற்றும் மானியங்கள் அடங்கும்.

இதில் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) மூலம் ரூ.34,144 கோடியும், வணிக வரி மூலம் ரூ.28,164 கோடியும் கிடைத்துள்ளது.

மேலும், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மூலம் ரூ.10,493 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வட்டி மற்றும் ஓய்வூதியம்

வட்டி மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்ட தொகை

அரசின் மொத்த செலவான ரூ.1,38,140 கோடியில், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கான வட்டி செலவே பெரும்பகுதியை அடைத்துக் கொண்டுள்ளது.

முதல் 5 மாதங்களில் மட்டும் கடன்களுக்கான வட்டியாக ரூ.25,991 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அதேபோல, ஓய்வூதியத்திற்காக ரூ.21,008 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அரசு புதிய கடன்கள் எதையும் பெறவில்லை என்பது நிதி நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

எதிர்கால இலக்கு

2026-27 நிதியாண்டின் இலக்குகளும் எதிர்கால நிதி நிர்வாகமும்

நடப்பு நிதியாண்டில் மொத்த வருவாய் ரூ.3,50,766 கோடியாகவும், நிகரக் கடன் பெறுதல் ரூ.1,21,474 கோடியாகவும் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறையை மாநில உற்பத்தி மதிப்பில் (ஜிஎஸ்டிபி) 3 சதவீதத்திற்குள் வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் மாதங்களில் அரசின் வரி வருவாய் அதிகரிப்பது மற்றும் செலவுகள் கட்டுப்படுத்தப்படுவதைப் பொறுத்தே தமிழகத்தின் அடுத்தகட்ட நிதிநிலை அமையும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT