இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மிகப்பெரிய தாக்குதல்! ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
லாஸ் வேகாஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தி விருப்பங்களுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவுடன் ஈரான் உடனடியாக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அமெரிக்கா ஏற்கனவே வெனிசுலாவில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையைப் போன்றே ஈரானிலும் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மிகப்பெரிய தாக்குதலை நடத்தத் தயாரிப்புகள் தயாராக இருந்ததாகவும், ஆனால் ஈரான் கோரிக்கையை ஏற்று அதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா
வெனிசுலா பாணி உத்தியும் கச்சா எண்ணெய் அரசியலும்
தமது உரையில் வெனிசுலா நடவடிக்கையைக் சுட்டிக்காட்டிய டிரம்ப், "வெனிசுலாவில் அது வெறும் 48 நிமிடப் போராக மட்டுமே இருந்தது, போருக்கான செலவை அங்கிருந்து எடுக்கப்பட்ட வளங்கள் மூலமே ஈடுசெய்தோம்" எனக் கூறினார்.
அதேபோன்றதொரு உத்தியையே தற்பொழுது ஈரானிலும் அமெரிக்கா பயன்படுத்தி வருவதாகவும், ஈரானின் ராணுவ பலத்தை அமெரிக்கத் தாக்குதல்கள் பெருமளவில் பலவீனப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மனித உயிர்களைப் பலிவாங்குவதை விட ஒரு நல்ல உடன்படிக்கையை எட்டுவதையே தாம் விரும்புவதாகக் கூறிய டிரம்ப், ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்பதில் உறுதியாக உள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி ஒப்பந்தமும் உலக சந்தை நிலவரமும்
டிரம்ப்பின் இந்த அதிரடி பேச்சுக்கு இடையே, ஓமன் நாட்டுடன் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை சீரமைப்பதற்கான வரைவு ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்கா போன்ற மூன்றாம் தரப்பு சக்திகள் இடையூறு செய்யாமல் இருந்தால் மட்டுமே இந்த ஒப்பந்தம் முழுமையடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு இப் பாதை மிக முக்கியமானதாக விளங்குவதால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை தற்போது பேரல் ஒன்றுக்கு $80 டாலர் அளவில் நிலவி வருகிறது.