இந்த பழங்களின் விதைகளை தூக்கி எறிந்துவிடாதீர்கள்; மாறாக அவற்றை உண்ணலாம்
ஆரோக்கிய குறிப்பு: நம்மில் பெரும்பாலோர் பழங்களைச் சாப்பிட்டு, அவற்றின் விதைகளை சாப்பிட முடியாததாகக் கருதி நிராகரிக்கிறோம். இருப்பினும், சில பழங்களின் விதைகளில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, அவற்றை உண்ணலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக பழங்களை போலவே அவற்றின் விதைகளும், கொட்டைகளும் ஊட்டச்சத்து நிறைந்தது தான். ஆனால் அவற்றை சரியான முறையில் உண்ண வேண்டும். சரி, உண்ணக்கூடிய விதைகளை கொண்ட பழங்கள் எவை? அவற்றை எப்படி உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம்.
பப்பாளி விதைகள்
பப்பாளியின் சிறிய, கருப்பு விதைகள் சற்று கசப்பாக இருந்தாலும், சத்தானவை. இந்த விதைகள், செரிமானம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாமல், அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உங்கள் எடை இழப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கவும் முடியும். அவற்றை பொடியாக அரைத்து, உங்கள் தினசரி ஸ்மூத்திகள், சூப்கள் போன்றவற்றில் சேர்க்கவும்.
தர்பூசணி விதைகள்
தர்பூசணி பழத்தின் ருசியான சதை பகுதியை சாப்பிடும்போது, நமக்கு தொல்லை தருவது அந்த குட்டி குட்டி விதைகள் தான். ஆனால் அந்த விதைகளை தூக்கி எறிய வேண்டாம், ஏனெனில் அவற்றில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது உங்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு நல்லது. இந்த விதைகளில் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. நீங்கள் சில தர்பூசணி விதைகளை வறுத்து, அதன் மேல் உப்பு தூவி, மாலை நேர சிற்றுண்டி போல சாப்பிடலாம். மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்!
பேஷன் பழ விதைகள்
பேஷன் பழ விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை உங்கள் அருகே அண்டவிடாது. அதனால் உங்கள் மன ஆரோக்கியம் மேம்படுகிறது. கூடுதலாக, இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஒற்றைத் தலைவலிகளைத் தடுக்கும் திறன் கொண்டது. அவற்றை சாப்பிட சிறந்த வழி, பழத்தோடு, விதைகளையும் சேர்த்து ருசிப்பதாகும்.
மாங்கொட்டை
மாம்பழத்தின் கொட்டையில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாங்கொட்டையில், பழத்தை போன்றே நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால், எடை இழக்க விரும்புவோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இந்த மாம்பழ கொட்டையை காய வைத்து, பொடியாக அரைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு கிராமுக்கு மிகாமல் இந்த பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.