யோகாவிற்கு புதிதா? இந்த ஆசனங்களில் இருந்து துவங்குங்கள்
யோகா பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் நிலவி வந்தாலும், அதன் முக்கியத்துவம் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது எனலாம். உங்கள் உடல்நலனை மேம்படுத்த தீவிர ஒர்க்கவுட் செய்ய வேண்டியது இல்லை. சில எளிய யோகா பயிற்சிகளை தினசரி செய்தாலே போதுமானது. நீங்கள் புதிதாக யோகா செய்ய துவங்கியுள்ளீர்கள் என்றால், சில ஈஸியான யோகா பயிற்சிகள் இதோ: சுகாசனம்: பெயருக்கு ஏற்றார் போல, சுகாசனம் என்பது நீங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய எளிமையான, அடிப்படையான யோகா போஸ் ஆகும். அமைதியான இடத்தில், தரையில் கால் மடித்து உட்கார வேண்டும். குறைந்தது ஒரு நிமிடமாவது உங்கள் கண்களை மூடிக்கொண்டு ஆழமாக சுவாசிக்கவும். இந்த ஆசனம் உங்களை அமைதியாகவும், கவனத்துடன், நிதானமாகவும் வைத்திருக்கும்.
எளிமையான யோகா பயிற்சிகள்
பாலாசனா: தரையில் மண்டியிட்டு, உங்கள் குதிகால் மீது உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் தொடைகளும் மார்பும் தொடும்வரை முன்னோக்கி வளையவும். கைகளை பக்கவாட்டாகவும் வைத்துக்கொள்ளலாம், அல்லது முன்னோக்கியும் நீட்டலாம். மூன்று-ஐந்து நிமிடங்கள் அதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனம், உங்கள் தசைகளை தளர்த்தி நன்றாக தூங்க உதவுகிறது. தடாசனம்: இந்த யோகா ஆசனம் உடல் நிலை, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் கால்களை சற்று அகல வைத்துநின்று, உங்கள் கைகளை கூப்பவும். மூச்சை உள்ளிழுத்து, கைகளை உங்கள் தலைக்குமேல் உயர்த்தி, உங்கள் குதிகால்களை உயர்த்தவும். 10 வினாடிகளுக்கு பின்னர், மூச்சை மெதுவாக வெளியே விடுங்கள். உங்கள் குதிகாலை கீழே இறக்கி, ரிலாக்ஸ் செய்யவும்.