புரதம் நிறைந்த ஹோட்டல் ஸ்டைல் சோயா சாப் கரி செய்வது எப்படி?
தற்போது தமிழகத்தில் பல கடைகளில் பிரபலமாக கிடைக்கக்கூடிய உணவு சோயா சாப் மற்றும் சோயா சாப் கரி. வட இந்திய உணவான இந்த கரி, பல இளவட்டங்களுக்கு மிகவும் பிடித்த உணவாக மாறியுள்ளது. சப்பாத்தி, நாண் மட்டுமின்றி, இட்லி, தோசைக்கு கூட சூப்பர் சைடுடிஷ். இறைச்சி போன்ற சுவையில் உள்ள ஒரு சத்தான சைவ உணவாகும் இந்த சோயா சாப் கரி. இதில் புரத சத்து அதிகம் இருப்பதால், எடையை குறைக்க உதவுகிறது. சாப் என்பது சோயா துண்டுகளாகும். அதனுடன் சரியான விகிதத்தில் மசாலாவை சேர்ப்பதால், இது இறைச்சி போன்ற அமைப்பையும், சுவையையும் கொடுக்கிறது. சோயா சேர்ப்பதில் உங்களுக்கு விருப்பமல்ல என்று நீங்கள் நினைத்தால், அதற்கு மாற்றாக பனீர் அல்லது காய்கறிகளுடன் சமைக்கலாம்.
செய்முறை: மேரினேஷன் செய்ய:
10 குச்சி சோயா சாப் எண்ணெய், பொரிப்பதற்கு ½ கப் கெட்டி தயிர் ½ தேக்கரண்டி மஞ்சள் ½ தேக்கரண்டி மிளகாய் தூள் ½ தேக்கரண்டி கரம் மசாலா ½ தேக்கரண்டி உப்பு வெங்காயம்+தக்காளி விழுது 2 டீஸ்பூன் எண்ணெய் 2 வெங்காயம், நறுக்கியது 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது 4 தக்காளி, நறுக்கியது கிரேவிக்கு: 2 டீஸ்பூன் எண்ணெய் 1 தேக்கரண்டி வெண்ணெய் 1 பிரிஞ்சி இலை 1 இன்ச் இலவங்கப்பட்டை 5 கிராம்பு 2 ஏலக்காய் 1 டீஸ்பூன் சீரகம் ½ தேக்கரண்டி மஞ்சள் ½ தேக்கரண்டி மிளகாய் தூள் 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் ½ தேக்கரண்டி சீரக தூள் 1 கப் தண்ணீர் 1 தேக்கரண்டி கசூரிமேத்தி
செய்முறை
முதலில், சோயா சாப்பை எடுத்து தண்ணீரில் நன்கு அலசவும். தண்ணீரால் நன்றாக சுத்தம் செய்த பின்னர், அதை நன்றாக பிழிந்து விடவும். நீங்கள் விரும்பும் அளவு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் (குறிப்பு: பெரிய துண்டுகளாக வெட்டினால், வறுப்பதற்கு நேரம் பிடிக்கும்) நறுக்கிய சாப் துண்டுகளை,பொன்னிறமாகவும், மிருதுவாகவும் மாறும் வரை குறைந்த முதல் மிதமான தீயில், சூடான எண்ணெயில் வறுக்கவும். வறுத்த சாப்புடன், ½ கப் தயிர், ½ தேக்கரண்டி மஞ்சள், ½ தேக்கரண்டி மிளகாய் தூள், ½ தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் ½ தேக்கரண்டி உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் நன்றாக கலந்து, 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
செய்முறை
ஒரு பெரிய கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை சேர்த்து சூடாக்கவும். வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும் வரை வதக்கவும். முழுமையாக ஆறவைத்து மிக்ஸியில் பேஸ்ட் போல அரைக்கவும். ஒரு பெரிய கடாயில், 2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி வெண்ணெய் சூடாக்கவும். பிரிஞ்சி இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து, வாசனை வரும் வரை வதக்கவும். இப்போது, மஞ்சள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் சீரக தூள் சேர்க்கவும். லேசாக வாசனை வந்ததும், தயார் செய்யப்பட்ட வெங்காய தக்காளி விழுதை சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை, மிதமான தீயில் சமைக்கவும்.
செய்முறை
கலவையில் எண்ணெய் தனியாக பிரிந்து வரும்பொழுது, மாரினேட் செய்துவைத்த சோயா சாப்பை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறிவிடவும். பின்னர் அதனுடன், 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் குழம்பிற்கு ஏற்றவாறு தண்ணீர் அளவை மாற்றிக்கொள்ளலாம். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, 15 நிமிடங்கள், இளம் தீயில் சமைக்கவும். இறுதியாக, கசூரி மேத்தி சேர்த்து நன்கு கலக்கவும். சுவையான, ஆரோக்கியமான சோயா சாப் மசாலா கிரேவி தயார்.