ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவங்கள் என்னென்ன?
நாடு முழுவதும் நவராத்திரி பூஜைகள் நடந்து வந்த நிலையில் இறுதி கட்டமாக இன்று(அக்.,23) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. சக்தி உற்சவமாக இந்த நவராத்திரி பூஜைகள் நடத்தப்படுகிறது. நவராத்திரி தினத்தின் இறுதி நாள் மட்டுமின்றி நவமி திதி என்ற கணக்கீட்டிலும் இந்த ஆயுத பூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. நம்முள் பலருக்கு ஆயுத பூஜை தினமன்று ஏன் அரிவாள், கத்தி, வாகனங்கள் போன்ற நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிபடுகிறோம்? என்ற கேள்வி நிலவி வருகிறது. அது ஏன் என்றால், சக்தி அதாவது அம்பாலின் அருளை பெறுவதற்காக தான் இந்த நவராத்திரி பூஜைகளை நாம் செய்கிறோம்.
உயிரில்லா ஜட பொருட்களுக்கு பூஜை செய்வது ஏன் ?
அதன்படி, 'ஜடம்' என்று கூறப்படும் உயிரில்லா பொருட்களிலும் சக்தி என்னும் சைதன்யம் உள்ள காரணத்தினால் அது செயல்படுவதாக கூறப்படுகிறது. என்னதான் நாம் பயன்படுத்தும் வாகனங்கள் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றில் ஓடுகிறது என்றாலும், அதுக்குள் உள்ள ஓர் சக்தி தான் அதனை இயங்கவைக்கிறது. அந்த சக்தியினை வழிபடும் விதமாகவே இந்த ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது என்று ஆன்மீகம் ரீதியாக சிவஸ்ரீ சண்முக சிவாச்சாரியார் ஓர் பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.
ஆயுத பூஜை கொண்டாடப்படுவதன் அவசியம்
நாம் அமரும் இருக்கை, பார்க்கும் கண்ணாடி, மிக்சி-க்ரைண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு உயிர் இல்லையெனிலும் அவைகள் இல்லாமல் நமது அன்றாட வாழ்வு இயங்காது. அப்படிப்பட்ட உயிரில்லா பொருட்கள் இயங்க உந்துகோளாக இருக்கும் சக்தியினை போற்றி வழிபாடு செய்யும் தினமாகவே இந்த ஆயுத பூஜை தினம் கொண்டாடப்படுகிறது. வீட்டில் மட்டுமில்லாமல் அலுவலகங்கள், கடைகள், வாகனங்கள் வைத்திருப்போரும் இன்றைய தினம் சிறப்பு பூஜை செய்வது வழக்கம்.
வாழ்வில் முன்னேற்றம் வேண்டி மேற்கொள்ளப்படும் ஆயுத பூஜை
இப்படி செய்வதன் மூலம் வியாபாரங்கள் பெருகும், வாகனங்கள் இயக்கப்படும் பொழுது பாதுகாப்பு, மற்றும் பழுதுப்படாமல் இயங்கும் என்று பல நம்பிக்கையின் பேரில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்படி நவமி தினத்தன்று நாம் வைத்து வழிபடும் பொருட்கள் அனைத்தையும் தசமி நாளான விஜயதசமி தினத்தன்று உபயோகப்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தவில்லை எனில், நாம் செய்த பூஜைகள் அனைத்தும் வீண் தான் என்றும் ஆன்மீக ரீதியில் கூறுகிறார்கள். ஆயுத பூஜை பண்டிகையினை சரஸ்வதி பூஜை என்றும் கூறுவார்கள்.
ஆயுத பூஜை வழிபடுவது எப்படி ?
ஆயுத பூஜை அன்று, ஆயுதங்கள் மட்டுமின்றி படிக்கும் புத்தகங்கள், பணிபுரியும் கணினிகள் போன்ற பொருட்களையும் வைத்து நாம் பூஜை செய்கிறோம். மாணவர்கள் புத்தி கூர்மையோடு நன்றாக படிக்கவும், பணிபுரிவோர் சாதுர்யமாக செயல்படவும் இவ்வாறு சக்தியினை வழிபடுகிறோம். இன்றைய தினம் நாம் வீட்டில் பூஜை செய்யும்போது வைத்து வைக்கப்படும் அனைத்து பொருட்களையும் இந்த தினம் முழுவதும் எடுத்து பயன்படுத்தாமல் பூஜை அறையிலேயே வைத்திருக்க வேண்டும். மறுநாள் விஜயதசமி தினத்தன்று எடுத்து தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்று வரலாறு கூறுகிறது. இதன்படி, அனைவரும் ஆயுத பூஜையினை இனிதாக கொண்டாடி வாழ்வில் வளம்பெற Newsbytes-ன் வாழ்த்துக்கள்.