உடலுக்கு ஆரோக்கியம் தரும் எள்ளோதரை செய்வது எப்படி?
நமது முன்னோர்கள், அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திய அனைத்து பொருட்களும் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியவையே. அவற்றில் ஒன்று எள்ளு. அன்றாடம் உணவில் சேர்ப்பதிலிருந்து, மனிதனின் கடைசி பயணம் வரை உடன் செல்லும் ஒரு பொருள் எள்ளு. எள்ளில் 20% புரதம், 50% எண்ணெய் மற்றும் 16% மாவுச்சத்து உள்ளது. எள் விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவையும் நீரிழிவு நோயைத் தடுப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் ஒரு ஸ்பூன் எள்ளை உட்கொள்வது குடல் பிரச்சனைகளை குணப்படுத்தவும், குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவும். எள் விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. சத்துள்ள இந்த எள்ளை கொண்டு தயார் செய்யும் எள்ளோதரையின் ரெசிபி இதோ:
தேவையான பொருட்கள்
சாதம் -1 கப் நல்லெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன் கடுகு- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன் வேர்க்கடலை-2 டீஸ்பூன் கறிவேப்பிலை- சிறிது உப்பு- தேவையான அளவு பொடித்த வெல்லம் -1/8 டீஸ்பூன் பெருங்காய பொடி-1/4 டீஸ்பூன் வறுத்து பொடி செய்த கருப்பு எள் - 3 டீஸ்பூன் எண்ணெய்-1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு-2 டீஸ்பூன் மிளகாய் வற்றல்-4
செய்முறை
வெறும் வாணலியில், எள்ளை சேர்த்து வெடிக்கும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும். பின் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து கொள்ளவும். இதை மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை தாளித்து, அரைத்த பொடி, பெருங்காயம், வெல்லப்பொடி, உப்பு மற்றும் சாதம் சேர்த்து கிளறி இறக்கவும். சத்தான மற்றும் சுவையான எள்ளோதரை தயார்!