'உலகில் வரலாறு காணாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளது': எச்சரிக்கை விடுத்தது ஐநா
கடந்த ஆண்டு உலகளாவிய வெப்ப பதிவுகள் வரலாறு காணாத அளவு இருந்தது என்று ஐநா இன்று தெரிவித்துள்ளது. 2014 முதல் 2023 வரையிலான காலகட்டம் தான் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பமான தசாப்தம் என்று ஐநா கூறியுள்ளது. மேலும், இதனால், இதுவரை இல்லாத அளவு பனிப்பாறைகள் உருகி பெருங்கடல்களின் நீர்மட்டம் உயர்நதுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு அதன் வருடாந்திர காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக வெப்பம் 2023ஆம் ஆண்டில் தான் பதிவு செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பூமி கூக்குரலிட்டு கொண்டிருக்கிறது'
ஒரு அதிக வெப்பமான தசாப்தத்தின் கடைசி ஆண்டாக இது வந்துள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்நிலையில், நமது கிரகம் விளிம்பில் உள்ளது என்பதை இது காட்டுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். பூமி கூக்குரலிட்டு கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், "புதைபடிவ எரிபொருள் மாசுபாடு காலநிலையை இதுவரை இல்லாத அளவு குழப்பியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். "பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5C(சராசரி மேற்பரப்பு வெப்பநிலை) குறைந்த வரம்பிற்கு இவ்வளவு நெருக்கமாக நாம் இதுவரை இருந்ததில்லை" என்று WMO தலைவர் ஆண்ட்ரியா செலஸ்டெ சாலோ ஒரு அறிக்கையில் எச்சரித்துள்ளார்.