தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இது சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் மருத்துவர்களின் பங்களிப்பைக் கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இந்த நாளில், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் ஓயாது உழைக்கும் மருத்துவர்களின் அயராத முயற்சிகளுக்கு மக்கள் தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர். மேற்கு வங்காளத்தின் இரண்டாவது முதலமைச்சராகப் பணியாற்றிய புகழ்பெற்ற மருத்துவரும் அரசியல்வாதியுமான டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்தநாளையே நாம் தேசிய மருத்துவர் தினமாக அனுசரிக்கிறோம். ஜூலை 1, 1882 இல் பிறந்த டாக்டர் ராய், இந்தியாவின் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றி இருக்கிறார்.
டாக்டர் பிதான் சந்திர ராயிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
மருத்துவத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மனிதகுலத்திற்கு தன்னலமின்றி சேவை செய்யும் மருத்துவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கும் வாய்ப்பை வழங்குவதால், தேசிய மருத்துவர் தினம் இந்தியாவில் மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக, தேசிய மருத்துவர்கள் தினத்தில், மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். அதோடு, மருத்துவ நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சுகாதாரம் தொடர்பான தலைப்புகளைப் பற்றி விவாதிக்கவும் மருத்துவ முன்னேற்றங்களை மேம்படுத்தவும் கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் பொது விரிவுரைகள் நடத்தப்படும்.