116 நாடுகளில் பரவியுள்ள Mpox; பாதிப்பு அறிகுறிகளும், சிகிச்சை முறையும்
116 நாடுகளை பாதித்துள்ள குரங்கம்மை என அழைக்கப்படும் Mpox நோய் பரவல் குறித்து விவாதிக்க உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு அதை கடுமையான தரம் 3 அவசரநிலை என வகைப்படுத்தியது. இது உடனடி மற்றும் அவசர கவனம் தேவை என்பதைக் குறிக்கிறது. 2022இல் இந்த நோய் பரவல் தொடங்கியதிலிருந்து, தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இது மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பாதிப்புகள் தோன்றி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, 2022ஆம் ஆண்டில், முதல் உறுதிப்படுத்தப்பட்ட Mpox பாதிப்பு கேரளாவில் 35 வயது நபர் ஒருவரிடம் கண்டறியப்பட்டது.
MPOX என்றால் என்ன?
Mpox ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்த Mpox வைரஸால் ஏற்படும் ஒரு வைரஸ் நோயாகும். இந்த நோய் முதன்முதலில் 1958ஆம் ஆண்டில் டென்மார்க்கில் குரங்குகளில் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையிலேயே முதலில் இதற்கு குரங்கம்மை என பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குரங்கம்மை என பெயர் வைத்தாலும், இது முதன்மையாக கொறித்துண்ணிகள் மற்றும் பிற சிறிய பாலூட்டிகளை பாதிக்கிறது. காங்கோ ஜனநாயகக் குடியரசில் 1970ஆம் ஆண்டு ஒன்பது வயது சிறுவனுக்கு முதல் மனிதனுக்கு mpox பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, Mpoxஇல் இரண்டு கிளேடுகள் அல்லது மரபணுக் குழுக்கள் உள்ளன: கிளேட் I, மத்திய மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் முக்கியமாகக் காணப்படுகிறது. கிளேட் II மேற்கு ஆப்பிரிக்காவில் அதிகமாகக் காணப்படுகிறது.
Mpox நோயின் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், தலைவலி, தசைவலி மற்றும் முகத்தில் அடிக்கடி தொடங்கி உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் ஒரு தனித்துவமான சொறி உள்ளிட்ட பெரியம்மை போன்றவை Mpoxஇன் பிரதான அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்ட விலங்குகள், உடல் திரவங்கள் அல்லது அசுத்தமான பொருட்களுடன் நேரடி தொடர்பு மூலம் வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. மேலும் இது சுவாசத் துளிகள் அல்லது நெருங்கிய தொடர்பு மூலமாகவும் ஒருவருக்கு நபர் பரவுகிறது. அறிகுறிகள் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். பெரும்பாலான மக்கள் லேசான அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள், ஆனால் சிலருக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும் அளவிற்கு கடுமையான பாதிப்பு ஏற்படலாம். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் பொதுவாக வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.
Mpox நோய்க்கான சிகிச்சை முறை என்ன?
தற்போது, Mpoxக்கு என எந்த சிகிச்சையும் இல்லை. அறிகுறிகளை நிர்வகிக்க உலக சுகாதார அமைப்பு ஆதரவு சிகிச்சையை பரிந்துரைத்தது. நோயாளிகள் நீர் சத்துடன் இருக்கவும், சத்தான உணவை உண்ணவும், போதுமான தூக்கத்தைப் பெறவும், தோலில் சொறிவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் காயங்களைத் தொட்ட பிறகு, கைகளைக் கழுவுதல் போன்ற பொது சுகாதார குறிப்புகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றவர்களுடன் இடத்தைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க முடியாவிட்டால், அவர்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்படும் வரை அவர்கள் காயங்களை ஆடை அல்லது கட்டுகளால் மூடி வைக்க வேண்டும். பெரியம்மைக்காக உருவாக்கப்பட்ட சில தடுப்பூசிகள் Mpoxக்கான தடுப்பூசிகளாக தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன. எனினும், இது ஆபத்தில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது