இன்று சர்வதேச விக் நாள்: இந்நாளின் வரலாறும், சில சுவாரஸ்ய தகவல்களும்
மார்ச் 10 சர்வதேச விக் தினம். இந்த நாள் வேடிக்கைகாக மட்டும் அல்ல; கீமோதெரபி மற்றும் பல்வேறு நோய்களால் ஏற்படும் முடி உதிர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அதன் குறிக்கோள்களில் ஒன்றாகும். விக்குகள் பழங்காலத்திலிருந்தே உள்ளன. உதாரணமாக, எகிப்தியர்கள் தங்கள் தலையை மொட்டையடித்துக்கொள்வார்கள் அல்லது தலைமுடியை நெருக்கமாக வெட்டுவார்கள். அதன் பின்னர், சூரிய ஒளியிலிருந்து தற்காத்துக்கொள்ள விக் அணிவார்கள். விக் என்பது மனித முடி, விலங்குகளின் முடி அல்லது செயற்கை இழை ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்படுகிறது. இந்நாளில், முடி உதிர்தலால் பாதிக்கபட்டவர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம், நீங்கள் கொண்டாடலாம். முடியை தானம் செய்ய, உங்கள் தலைமுடி போதுமான நீளத்தில் இருக்க வேண்டும். அதாவது, குறைந்தது 12 அங்குலங்கள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
கேன்சர் போராளிகள் விக்கை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம்
முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டவர்கள், விக் அணிய முடிவெடுத்ததும், உங்கள் முகத்திற்கு, ஏற்றார் போல விக்-ஐ தேர்ந்தெடுக்கலாம். சிலர் முற்றிலும் புதிய தோற்றத்தை தேர்ந்தெடுப்பார்கள். உதாரணமாக, நீண்ட கூந்தல் கொண்டிருந்தவர்கள், ஷார்ட்-ஹேர் ஸ்டைலிற்கு மாறலாம். சிலர், முடியின் நிறத்தை மாற்ற எத்தனிக்கலாம். விக் வாங்குவதற்கு முன்னர், ஒருமுறை ட்ரை செய்து பார்த்த பிறகு, முடிவெடுக்கவும். உங்கள் இயற்கையான கூந்தலின் தன்மையை ஒத்த விக்-ஐ தேர்ந்தெடுக்கவும். விக் அணிவதற்கு முன்னர், உங்கள் முடியை முழுக்க ஷேவ் செய்த பின்னர் அணியவும். சரும ஒவ்வாமை உள்ளவர்கள், இயற்கை முடியில் செய்த விக் பயன்படுத்தவும். இயற்கை விக்-ஐ பயன்படுத்தும் போது, பராமரிப்பு செலவு சிறிது அதிகம் ஆகும். அதை தவிர்க்க நினைப்பவர்கள், செயற்கை இழையினால் செய்யப்பட்ட விக்-ஐ தேர்ந்தெடுக்கலாம்.