உலக தாய்மொழி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள்
மொழி என்பது மனிதர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டும்தான் என்று பலரும் தவறாக நினைத்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், மொழி என்பது நம் பண்பாட்டு அடையாளம். ஒரு சமூகத்தின் அடையாளம். ஆனால், இன்றைய உலகமயமாதலினால் மொழிகள் அச்சுறுத்தலுக்குள்ளாகிவருவது மட்டுமல்ல, மறைந்துபோகும் அபாயமும் உள்ளது. மொழி அழிந்தால் மக்களின் பண்பாட்டு அடையாளம் அழியும். பண்பாட்டு அடையாளம் இல்லாத மக்கள், வரலாறு அற்றவர்களாகப் போவார்கள். மொழி எவ்வளவு தொன்மையானதாக இருந்தாலும் சரி, அது எவ்வளவு உன்னதமான இலக்கியங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் சரி, வழக்கொழிந்து போய்விட்டால், இலக்கியங்களெல்லாம் வெற்றுக் கிறுக்கல்களாகி விடும். தாய்மொழியினை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதியை உலக தாய்மொழி தினமாக சிறப்பிக்கிறது யுனெஸ்கோ.
எதற்காக குறிப்பாக தாய்மொழி தினம்?
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது பங்களாதேஷ். 1948இல், அப்போதைய ஜின்னா தலைமையிலான அரசு, உருது மொழியை பாகிஸ்தானின் ஒற்றை ஆட்சி மொழியாக மாற்ற திட்டமிட்டது. கல்வி தேர்வில் இருந்த வங்கமொழியை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. இதற்கு கிழக்கு பாகிஸ்தான், அதாவது பங்களாதேஷ், கடும் எதிர்ப்பு தெரிவித்தது. டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கினர். இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது. 1952 பிப்ரவரி 21ஆம் தேதி டாக்கா பல்கலைக்கழக மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில், அரசு நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். வங்கமொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவாகவே ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதியை, உலக தாய் மொழி தினமாக 1999இல் யுனெஸ்கோ அறிவித்தது.