ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை
இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே தண்ணீர் அடுத்தபடியாக மக்கள் விரும்பி அருந்தும் பானம் எதுவென்றால் அது தேநீர் தான். தற்போதைய காலகட்டத்தில் தேநீர் கடை இல்லாத தெருவை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது. காலை எழுந்தவுடன் தேநீர் பருகினால் மட்டுமே அந்த நாள் நமக்கு துவங்கியதாக கருதப்படும் அளவிற்கு தேநீர் நமது வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஆனால் இந்த தேநீர் பருகும் வழக்கம் சீனா நாட்டிலிருந்து தான் துவங்கியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அங்கு தேநீர் பருகும் வழக்கம் இருந்துள்ளது. அங்கிருந்து இந்த வழக்கம் ஜப்பான் நாட்டிற்கு பரவியுள்ளது.
ஆங்கிலேயர்கள் மூலம் இந்தியாக்குள் நுழைந்த தேயிலை
இந்தியர்களாகிய நமக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து தான் வந்தது, இந்த தேநீர் பருகும் வழக்கம். ஆங்கிலேயர்கள் நமது நாட்டினை ஆட்சி செய்த பொழுது, அவர்கள் தேவைக்காக மலைகளில் தேயிலையினை பயிரிட வைத்தனர். பின்னர் அதனை நம் நாட்டு மக்கள் நுகர துவங்கியதையடுத்து தேயிலையின் மோகம் இந்தியாவில் அதிகமானது. பிரிட்டனில், 17ம் நூற்றாண்டில் தேயிலை மிக பிரபலமடைந்த காலம். அதன்பின்னரே இந்தியாவில் ஆங்கிலேயர் இதனை பிரபலமாக்கினர். ஆங்கிலேயர் திணித்த வழக்கம் தான் தேநீர் என்றாலும், இந்தியா சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில், தேயிலையின் தேவை சர்வதேச அளவில் அதிகரித்தது என்று தெரிகிறது.
மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்த தேயிலை தோட்டங்கள்
இதனால் அதிகளவு தேயிலை தோட்டங்களை அமைத்து தேயிலையினை பயிரிட்டு, விற்பனை செய்து இந்தியா லாபம் அடைந்தது. மேலும் இந்த தேயிலை தோட்டம் மலைவாழ் மக்களுக்கு நல்லதொரு வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் தற்போதுவரை அளித்து வருகிறது. அதன்படி அதிக வேலைவாய்ப்பளிக்கும் துறைகளுள் தேயிலைத்துறை 2ம் இடத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் முதன்முறையாக தேயிலையினை பயிரிட்டவர், மணிராம் தேவான் என்று கூறப்படுகிறது. 1920ம் ஆண்டிற்கு பிறகு தான் இந்தியாவில் அனைவரும் தேநீர் குடிக்கும் வழக்கம் உருவானது என்றும் வரலாறு கூறுகிறது.
உலகளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா 2ம் இடம்
இதனிடையே உலகளவில் தேயிலை உற்பத்தியில் சீனா 36% என்னும் விதத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 22.6% என்னும் வீதத்தில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் மாநில வாரியாக பார்த்தால், இந்தியாவில் அசாம் மாநிலம் தான் தேயிலை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. 3,04,000 எக்டரில் தேயிலை இம்மாநிலத்தில் பயிரிடப்படும் நிலையில், இம்மாநில தேநீர் ருசிக்கு உலகமே அடிமை என்றுக்கூட கூறலாம். தேநீர் வகைகளுள் நூற்றுக்கணக்கான வகைகள் உண்டு. சிறியவர் முதல் பெரியவர் வரை, எடையினை குறைக்க உதவும் என்று கூறி அதிகம் குடிப்பது 'க்ரீன் டீ'. இந்த க்ரீன் டீ, ஜப்பான் மற்றும் சீனாவில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து, இந்தியாவில், தமிழ்நாடு மாநிலம் நீலகிரி மாவட்டம் தேயிலை உற்பத்திக்கு பெயர்போனதாகும்.
இந்திய மக்களிடையே இன்றியமையாத பானமாக மாறிப்போன தேநீர்
இந்தியாவில் பிரபலமான தேநீர் வகைகள் பல உண்டு. இந்தியாவில் ப்ளாக் டீ, க்ரீன் டீ, ஒயிட் டீ, மசாலா டீ, சாய் டீ, மூலிகை தேநீர், பழ தேநீர், ஊலாங் தேநீர் என பல வகைகள் உண்டு. வளரும் இடம், சூழல் உள்ளிட்ட அடிப்படையில் இதன் சுவைகள் மாறுபடும். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டு குளிரை எதிர்கொள்ளவே சூடாக தேநீர் பருகினர். ஆனால் இந்திய மக்கள் அப்படியல்ல. கொளுத்தும் வெயில் காலமாக இருந்தாலும் காலை எழுந்தவுடன் தேநீர்! திருமணம் போன்ற நிகழ்வுகள், பல்வேறு நிகழ்ச்சிகள், விருந்தினர் வருகையின் பொழுது, தலைவலி ஏற்பட்டால் என பல சந்தர்பங்களில் தேநீர் ஒரு இன்றியமையாத பானமாக இந்திய மக்களுள் கலந்துவிட்டது என்றால் அது மிகையல்ல.
இந்த காலவரிசையைப் பகிரவும்