இந்தோ சீன கலவை உணவான சோயா மஞ்சூரியன் செய்வது எப்படி?
சீனாவிலிருந்து வந்த சமையல் முறை இந்திய சுவையுடன் இணைந்தால் எப்படி இருக்கும்? அப்படி உருவான இந்தோ சீன உணவ வகைகளுள் ஒன்று தான் சோயா மஞ்சூரியன். பொறித்தல், வறுத்தல் என இரண்டு நிலைகளாக உருவாக்கப்படும் ஒரு இந்த சோயா மஞ்சூரியன். மேலும், டிரை மற்றும் கிரேவி என இரண்டு வகையான பக்குவங்களிலும், நமது தேவைகேற்ப இதனை சமைத்துக் கொள்ளலாம். ஒரு ஸ்டார்ட்ராக உணவுக்கு முன் சிறிய உணவாக எடுத்தக் கொள்ள டிரையாகவும், உணவுடன் காம்ப்ளிமெண்ரியாக உண்ண கிரேவியாகவும் சமைக்கலாம். இந்தோ சீன உணவுகளின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் சோயா மஞ்சூரியன் செய்வது எப்படி எனப் பார்க்காலம்.
தேவையான பொருட்கள்:
பெரிய சோயா - 100 கிராம் மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி கார்ன் ப்ளவர் மாவு - 3 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு பூண்டு - 4 பற்கள் பெரிய வெங்காயம் - 2 குடை மிளகாய் - 1 சோயா சாஸ் - கால் தேக்கரண்டி தக்காளி கெட்ச்சப் - 1 தேக்கரண்டி சிவப்பு சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
சோயா மஞ்சூரியன்: செய்முறை - முதல் நிலை
சோயா மஞ்சூரியனின் செய்முறையின் முதல் நிலையில், சோயாவை மட்டும் தனியே பொறித்து எடுத்து வைத்துக் கொள்வதையும், இரண்டாம் நிலையில் அதனை மஞ்சூரியனாக செய்யும் முறையையும் பார்க்கலாம். முதலில் சோயாவை சுடு தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை பிழிந்து தண்ணீர் இல்லாமல் ஈரப்பதம் மட்டும் கொண்டு வைத்துக் கொள்ளவும். ஈரப்பதத்துடன் இருக்கும் சோயாவில் நாம் எடுத்து வைத்திருக்கும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கார்ன் பிளவர் மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும். அதனை 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோயா கலவையை அதில் போட்டு பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை - இரண்டாம் நிலை:
மேற்கூறிய வகையில் சோயாவை பொறுத்து தனியே எடுத்து வைத்த பிறகு. தனியே ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அது காய்ந்ததும் பூண்டு, பெரிய வெங்காயம், குடை மிளகாய் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் உடனடியாக, கால் தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். அதன் பின்பு, அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் சோயா சாஸ், தக்காளி கெட்ச்சப் மற்றும் சில்லி சாஸ் ஆகியற்றை சேர்த்து கலந்து விடவும். பின்னர் அதில், சிறிதளவு கார்ன் பிளவர் மாவை தண்ணீரில் கலந்து ஊற்றிக் கொள்ளவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சோயாவை அத்துடன் நன்கு கலந்து வதக்கினால் சுவையான சோயா மஞ்சூரியன் ரெடி.