தீபாவளி2023- வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி?
மனிதர்களாகிய நமக்கு தீபாவளி மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியும் வழங்குகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக நமது செல்லப் பிராணிகளுக்கு அவ்வாறாக இல்லை. பட்டாசுகள் வெடிக்கப்படும் போது ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு, செல்லப் பிராணிகள் சுவாசிப்பதை கடினமாக்கி, இந்த நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதுபோன்ற சமயங்களில், செல்லப்பிராணிகள் மிக அதிகமான கவலையுடனும், சோர்வுடனும் காணப்படலாம். இதை சரி செய்வதற்கான வழி, நீங்கள் அவற்றுடன் சேர்ந்து அவைகளின் பதற்றத்தை சமாளிக்க உதவுவது தான். உங்கள் செல்லப்பிராணிகள், அதிகப்படியாக குரைத்தல், மூச்சிரைத்தல், கொட்டாவி விடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவை மன அழுத்தத்தில் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். தீபாவளி நாட்களில், உங்கள் செல்ல பிராணிகளை பாதுகாக்க சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
வீட்டிற்குள் வைத்து, ஒளி, காற்று மாசு இல்லாத சுற்றுப்புறத்தை உருவாக்க வேண்டும்
நாம் பொதுவாக வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய், பூனை போன்றவற்றுக்கு நம்மை விட கேட்கும் திறன் பல மடங்கு அதிகம். அதனால், பட்டாசு சத்தங்கள் நமக்கு கேட்பதை விட, அவற்றுக்கு பல மடங்கு அதிகமாக கேட்கும். இதனால் தீபாவளி சமயங்களில் உங்கள் செல்லப்பிராணிகளை வீட்டிற்குள் வைத்திருப்பது நல்லது. மேலும், காலை, மாலை வேலைகளில் வாக்கிங் அழைத்துச் செல்வதை தவிர்க்கலாம். பூட்டிய வீட்டிற்குள் சத்தம் கேட்காத வண்ணம் அவற்றை வைத்திருப்பது அவற்றின் பதட்டத்தை தணிக்க உதவும். மேலும், நறுமணமூட்டும் திரவியங்களை உங்கள் செல்லப் பிராணிகள் இருக்கும் இடத்தில் தெளிப்பது உதவும்.
பிடித்த உணவு வகைகளை வழங்கலாம்
உங்கள் செல்லப் பிராணிகளுக்கு ஏற்படும் பயத்தைப் போக்க, அவற்றுக்கு பிடித்தமான உணவுப் பொருட்களை வழங்கலாம். இயற்கையாக தயாரான சன்னல் விதை எண்ணை, செல்ல பிராணிகளின் பயத்தை போக்குவராக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்துவதற்கு முன், சரியான அளவை கால்நடை மருத்துவரை அணுகி பெற்றுக் கொள்வது நல்லது. வழக்கத்தை பின்பற்றவும் மனிதர்களைப் போலவே செல்லப்பிராணிகளுக்கும் வழக்கத்தை பின்பற்றுவது பிடிக்கும். அதனால் ஒருபோதும், வீட்டில் நிரம்பி வழியும் உறவினர்களால், செல்ல பிராணிகளின் உணவு நேரங்கள் மற்றும் விளையாட்டு நேரங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்படலாம்.
மயக்க மருந்துகள் உதவலாம்
உங்கள் செல்லப்பிராணிகளை, உங்களைத் தவிர வேறு யாருக்கும் நன்றாக தெரியாது. தீபாவளி சமயங்களில் அவை கட்டுப்படுத்த முடியாத வகையில் செயல்பட்டால், கால்நடை மருத்துவரை அணுகி அவற்றுக்கு மயக்க மருந்துகள் வழங்கலாம். நாய்களுக்கு 'மெலடோனின்' என்ற மருந்தை பயன்படுத்தலாம். பூனைகளுக்கு, அவைகள் விளையாடும் பொம்மைகளை வழங்குவது, அவற்றின் பதட்டத்தை குறைக்க உதவும். மேலும் இது போன்ற சமயங்களில், உங்கள் செல்லப்பிராணிகளுக்கு அருகில் நீங்கள் இருப்பது அவற்றை சிறப்பாக உணர உதவும்.