
ஹேங்கொவரைப் போக்க தண்ணீர் மட்டும் போதாது; ஆராய்ச்சி சொல்வது என்ன?
செய்தி முன்னோட்டம்
ஒரு இரவு முழுவதும் குடிபோதையில் இருந்த பிறகு, தலைவலி மற்றும் குமட்டலுடன் காலையில் எழுந்திருப்பது ஒரு விரும்பத்தகாத அனுபவம். ஹேங்கொவர் என்று அழைக்கப்படும் இந்த அனுபவத்திற்கு, தண்ணீர் மட்டுமே சிறந்த தீர்வு எனப் பலரும் நம்புகிறார்கள். ஆனால், அது ஒரு சிறிய பகுதிதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆய்வுகளின்படி, தண்ணீர் மட்டும் ஹேங்கொவர் அறிகுறிகளைத் தடுப்பதில் குறைந்தபட்ச தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. எனவே, ஹேங்கொவவை சமாளிக்க வேறு என்னென்ன அறிவியல் பூர்வமான வழிகள் உள்ளன என்பதை இதில் விரிவாக பார்க்கலாம்.
வழிகள்
எலெக்ட்ரோலைட்ஸ்
ஆல்கஹால் சிறுநீர் பெருக்கியாகச் செயல்பட்டு, உடலில் நீர்ச்சத்தையும், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களையும் வெளியேற்றுகிறது. வெறும் தண்ணீருக்குப் பதிலாக, இளநீர் அல்லது பழச்சாறு போன்ற எலெக்ட்ரோலைட்டுகள் நிறைந்த பானங்களை அருந்தலாம். இந்தத் தாதுக்களை மீண்டும் பெறுவதன் மூலம் சோர்வு மற்றும் தலைசுற்றல் போன்ற அறிகுறிகளைத் தணிக்க முடியும்.
உணவு
மது குடிக்கும் முன் மற்றும் பின் எடுத்துக்கொள்ளப்படும் உணவு
குடிப்பழக்கத்திற்கு முன் மற்றும் பின் உணவு உண்பது, ஹேங்கொவர் தீவிரத்தைக் குறைக்க உதவும். குறிப்பாக துத்தநாகம் மற்றும் நிகோடினிக் அமிலம் நிறைந்த உணவுகள், ஆல்கஹால் செரிமானத்திற்கு உதவுகிறது. குமட்டலாக உணர்ந்தாலும், ஒரு லேசான உணவை எடுத்துக்கொள்வது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இஞ்சி தேநீர் குமட்டலைத் தணிக்கும். மேலும், புதினா தேநீர், தலைவலியைப் போக்க உதவும். இவை தவிர, ஒரு மென்மையான நடைப்பயிற்சி போன்ற லேசான உடற்பயிற்சியில் ஈடுபடுவது, எண்டார்பின்களை வெளியிடத் தூண்டும். இது இயற்கையாகவே வலியைத் தணிக்க உதவும். உடற்பயிற்சிக்குப் பின், போதுமான ஓய்வு எடுப்பது உடலை வேகமாகச் சரிசெய்ய உதவும். இறுதியாக, ஹேங்கொவரைத் தவிர்க்க சிறந்த வழி, பொறுப்புடன் குடிப்பது மற்றும் உங்கள் வரம்புகளை அறிந்து கொள்வதுதான் என்பதை மறந்துவிடாதீர்கள்.