ஒவ்வொரு பெண்ணின் ஹான்ட்பேக்கிலும் அவசியம் இருக்க வேண்டியவை
வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமின்றி, அனைத்து வயது பெண்களும் உபயோகிக்க கூடிய ஒரு பொருள், கைப்பை எனக்கூறப்படும் ஹான்ட்பேக். அது வெறும் அலங்கார சின்னம் மட்டுமின்றி, உங்களது அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல உங்களுக்கு உதவும் ஒரு பை ஆகும். சரி, ஹான்ட்பேக்கில் என்னவெல்லாம் வைத்து கொள்ளலாம்? உங்கள் மொபைல், பணம் தவிர வேறு என்ன அதில் எடுத்து செல்ல வேண்டும் என உங்களுக்கு சில ஐடியாக்கள் நாங்கள் வழங்குகிறோம்.
கையிருப்பு பணத்தை வைத்திருங்கள்
டிஜிட்டல் இந்தியா தற்போது நடைமுறையில் இருந்தாலும், வைஃபை செயலிழந்தாலும், பேமெண்ட் ஆப் வேலை செய்யாதபோதும், அல்லது ஸ்டோரின் கார்டு மெஷின் வேலை செய்யாதபோதும் என அவ்வப்போது, ஆன்லைன் பண பரிவர்த்தனையில் எதிர்பாராத சிக்கல்களை சந்திக்கிறோம். இதுபோன்ற அவசரநிலைகளுக்கு, உங்கள் கைப்பையில் சிறிது பணத்தை எப்போதும் வைப்பது நல்லது. சில்லறை பரிவர்த்தனைகளை எளிதாக்க, சில்லறை காசுகளாகவும் வைத்துக்கொள்ளவும்.
பேன்டைட்கள், டிஷ்யூக்கள் மற்றும் சானிடைசர்
எதிர்பாராதவிதமாக, உங்கள் செருப்பு கடித்தல் அல்லது சிராய்ப்புகள் போன்ற எதிர்பாராத விபத்துக்களுக்கு தீர்வாக உங்கள் பையில் சில பேன்டைட்களை வைத்திருப்பது புத்திசாலித்தனம். சமீபத்திய தொற்றுநோய்க்குப் பிறகு விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியமாகி விட்டது. அதனால், சுத்தமான கைகள் மற்றும் தனிமனித சுகாதாரத்திற்கும் ஒரு சானிடைசர் அவசியம். கூடுதலாக, வெட் வைப்ஸ் அல்லது டிஷ்யூக்களை வைத்துக்கொள்வதும் நல்லது. முகம், உள்ளங்கைகளை வெட்வைப்ஸ் கொண்டு துடைப்பத்தால் புத்துணர்ச்சியடையச் செய்யும், அதே நேரத்தில் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
அத்தியாவசிய சுகாதார பொருட்கள்
மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை எடுத்துச் செல்வது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமல்ல, எதிர்பாராத சூழ்நிலைகளில் தேவைப்படும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் முக்கியமானது. கூடுதலாக, பெண்கள், மினி டாய்லெட் சீட் சானிடைசர் ஸ்ப்ரேயை வைத்துக்கொள்ளலாம். பொதுக் கழிவறைகளில், சுகாதாரத்தை உறுதி செய்ய அதை பயன்படுத்தலாம். அதேபோல, பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை அப்புறப்படுத்த, ஒரு டிஸ்போசபிள் பை வைத்திருக்கவும். அதனுடன் உங்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படும் குட்டி டியோடரண்ட் வைத்திருங்கள்.
உங்கள் அத்தியாவசிய மேக்-அப் கிட்-ஐ மறந்துவிடாதீர்கள்
மேக்அப் என்றதும் பார்லர் அளவிற்கு சாமான்களை தூக்கி செல்லவேண்டும் என அர்த்தம் இல்லை. சேஃப்டி பின்கள், ஹேர் கிளிப் போன்றவை வைத்திருக்கலாம். நாள் முழுவதும் நீங்கள் அழகாக இருப்பதை உறுதிசெய்ய, மினி லிப்ஸ்டிக், சிறிய கண்ணாடி, ஒரு சீப்பு ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். இந்த பொருட்கள், அவசரகதியில் நீங்கள் ஓடும் போது உங்களுக்கு உதவும்.
மற்ற அத்தியாவசியங்கள்
கையில் நோட்பேட் மற்றும் பேனா வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் உங்கள் ஃபோன் சார்ஜ் தீர்ந்து போகலாம். அப்போது ஏதேனும் குறிப்பெடுத்து கொள்ள, இந்த நோட் மற்றும் பேனா உதவும். அதோடு, எமெர்ஜென்சி நேரத்தில் பயன்படுத்த, மடிக்கக்கூடிய ஷாப்பிங் பையை எடுத்துச் செல்லுங்கள். பருவ காலத்தில் வெளியில் செல்பவராக இருந்தால், குடையோ, தொப்பியோ எடுத்து கொள்ளலாம்.