பத்தாண்டுகளில் 3 மடங்கு உயர்ந்த அரசு சுகாதார செலவு: குடும்பங்களின் நேரடி மருத்துவ செலவு 42.7% ஆகக் குறைந்தது
செய்தி முன்னோட்டம்
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள 2023-24 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதாரக் கணக்குகள் அறிக்கையின்படி, இந்திய அரசின் சுகாதார செலவினம் கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. கடந்த 2013-14-ல் ₹1,29,778 கோடியாக இருந்த அரசு சுகாதார செலவு, 2023-24-ல் ₹4,14,196 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த சுகாதார செலவினத்தில் அரசின் பங்கு 43.5 சதவீதமாக அதிகரித்து, முதல் முறையாகக் குடும்பங்களின் நேரடி செலவினத்தை விஞ்சியுள்ளது.
குடும்பங்கள்
64.2%-லிருந்து 42.7% ஆகக் குறைந்த குடும்பங்களின் நேரடி மருத்துவ செலவு
அரசின் பொது சுகாதார நிதியுதவி அதிகரித்ததன் எதிரொலியாக, சாமானிய மக்கள் தங்கள் கையிலிருந்து நேரடியாக செலவிடும் மருத்துவ செலவு 21.5 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.
கடந்த 2013-14-ல் 64.2 சதவீதமாக இருந்த குடும்பங்களின் நேரடி செலவு விகிதம், 2023-24-ல் 42.7 சதவீதமாக சரிந்துள்ளது.
இருப்பினும் நாட்டின் மொத்த சுகாதார செலவில் ஐந்தில் இரண்டு பங்கிற்கும் அதிகமான சுமையை குடும்பங்களே நேரடியாக சுமக்கும் நிலை தொடர்கிறது.
ஆயுஷ்மான் பாரத்
ஆயுஷ்மான் பாரத் மற்றும் தனியார் மருத்துவக் காப்பீட்டுப் பங்களிப்பு அதிகரிப்பு
கடந்த பத்து ஆண்டுகளில் தனிநபர் அரசு சுகாதார செலவு ₹1,042-லிருந்து ₹2,959 ஆக ஏறக்குறைய மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
அதேபோல ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் மாநில காப்பீட்டுத் திட்டங்கள் அடங்கிய சமூக பாதுகாப்பு செலவினம் 6 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது.
கூடுதலாக தனியார் மருத்துவக் காப்பீட்டின் பங்கும் 3.4 சதவீதத்திலிருந்து 10.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இலவச மருந்துத் திட்டங்கள்
ஆரம்ப சுகாதாரத்திற்கு ₹1.53 லட்சம் கோடி ஒதுக்கீடு மற்றும் இலவச மருந்துத் திட்டங்கள்
அடிமட்ட அளவில் மருத்துவ சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஆரம்ப சுகாதாரத் துறையில் அரசு ₹1.53 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது.
ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் மையங்கள், இலவச மருந்து மற்றும் பரிசோதனைத் திட்டங்கள், பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் மற்றும் தேசிய டயாலிசிஸ் திட்டம் ஆகியவை மக்களின் மருத்துவ செலவைக் குறைக்க பெரிதும் உதவியுள்ளன.
சர்வதேச சுகாதாரக் கணக்குகள் அமைப்பு (SHA) 2011 விதிகளின்படி தயாரிக்கப்பட்ட 11-வது சுற்று அறிக்கை இதுவாகும்.