காந்தி ஜெயந்தி 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சுவாரஸ்ய தகவல்கள்
இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காந்தி ஜெயந்தி எப்போது தொடங்கப்பட்டது, அதன் வரலாறு மற்றும் பின்னணி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இதில் தெரிந்து கொள்ளலாம். அக்டோபர் 2, 1869இல், குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான இந்தியாவின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். காந்தியின் அணுகுமுறை மற்றவர்களை விட தனித்துவமானது. அவர் வன்முறையற்ற ஒத்துழையாமை மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். சத்தியாகிரகம் என்ற அவரது இந்த தாரக மந்திரம், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் நெல்சன் மண்டேலா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
காந்தி ஜெயந்தி தொடங்கப்பட்டது எப்போது?
1948 ஜனவரி 30ஆம் தேதி காந்தி படுகொலை செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, அதே ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதியை காந்தி ஜெயந்தி என்று இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது மரபு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கு ஈடு இணையற்றது. அகிம்சையை ஊக்குவிப்பதன் மூலம், ஆயுத மோதலில் ஈடுபடாமல் அடக்குமுறை ஆட்சியை அகற்ற உதவினார். உலகளாவிய அமைதி மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய அவரது செய்தி உலக அளவில் அவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அமைதிக்கான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை 2007 ஆம் ஆண்டில் அக்டோபர் 2 ஆம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்தது.
காந்தி ஜெயந்தியின் முக்கியத்துவம்
காந்தி ஜெயந்தியின் முக்கியத்துவம், மகாத்மா காந்தியின் மதிப்புகளை நினைவு கூர்வதிலும் பிரதிபலிப்பதிலும் உள்ளது. உண்மை, அகிம்சை மற்றும் எளிமை ஆகியவற்றில் அவர் அளித்த முக்கியத்துவம் தனிநபர்களையும் சமூகங்களையும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. மாற்றத்தைக் கொண்டுவருவதில் அமைதியான எதிர்ப்பின் ஆற்றலை நினைவூட்டுவதாகவும் இந்த நாள் விளங்குகிறது. காந்தி ஜெயந்தி அன்று இந்தியாவில் தேசிய விடுமுறையாகும். அவரது நினைவைப் போற்றும் வகையில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த நாளில் மூடப்படும். மகாத்மா காந்தியின் படம் அனைத்து இந்திய கரன்சி நோட்டுகளிலும் உள்ளது. இது நாட்டின் வரலாற்றில் அவரது செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்
காந்தி ஜெயந்தி அன்று, இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர், மற்ற முக்கிய பிரமுகர்களுடன், டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துவர். பல கல்வி நிறுவனங்கள் காந்தியின் வாழ்க்கை, கொள்கைகள் மற்றும் இந்தியாவின் சுதந்திரத்திற்கான பங்களிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு விவாதங்கள், வினாடி வினாக்கள் மற்றும் கட்டுரை-எழுத்து போட்டிகளை ஏற்பாடு செய்கின்றன. கலை மற்றும் கைவினைக் கண்காட்சிகள் அவரது வாழ்க்கைப் பணிகளைக் காண்பிக்கும் பொதுவான நிகழ்வுகளாகும். காந்தியின் தூய்மை மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் (தூய்மை இந்தியா மிஷன்) ஆகியவற்றின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக தூய்மை இயக்கங்களில் ஈடுபடுகின்றனர்.