'எனர்ஜி டிரிங்க்' பெயரை ஏன் தடை செய்யக் கூடாது? Red Bull-க்கு FSSAI 7 நாட்கள் கெடு
செய்தி முன்னோட்டம்
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), ஆஸ்திரிய நிறுவனமான ரெட் புல் (Red Bull) தனது பானங்களில் 'எனர்ஜி டிரிங்க்' (Energy Drink) என்ற பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக திங்கட்கிழமை ரெட் புல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ரகசிய நோட்டீஸில், இந்த லேபிளை ஏன் தடை செய்யக் கூடாது என்பதற்கு ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
குற்றச்சாட்டு
சேர்க்கப்பட்ட சர்க்கரையிலிருந்தே ஆற்றல் கிடைப்பதாக FSSAI குற்றச்சாட்டு
ரெட் புல் பானத்தின் ஊட்டச்சத்து கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ள FSSAI, அந்த பானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆற்றலின் பெரும்பகுதி மற்ற மூலப்பொருட்களை விட அதிகப்படியான சேர்க்கப்பட்ட சர்க்கரையிலிருந்தே (Added Sugar) கிடைப்பதாகத் தெரிவித்துள்ளது.
இது நுகர்வோருக்கு ஆரோக்கியம் மற்றும் உடனடி ஆற்றல் கிடைப்பதாக தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி, அதிக சர்க்கரை நுகர்வைத் தூண்டும் என்பதால் இதற்கு அறிவியல் ரீதியான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்க்கரை அபாயம்
500 மி.லி. அளவு அறிவுறுத்தலும் 55 கிராம் சர்க்கரை அபாயமும்
ரெட் புல் பாக்கெட்டுகளில் ஒரு நாளைக்கு 500 மி.லி.க்கு மேல் அருந்த வேண்டாம் என அச்சிடப்பட்டுள்ள வாசகம், தினமும் 500 மி.லி. வரை குடிப்பது பாதுகாப்பானது என்ற தவறான எண்ணத்தை நுகர்வோரிடம் ஏற்படுத்துவதாக FSSAI சுட்டிக்காட்டியுள்ளது.
100 மி.லி. ரெட் புல் பானத்தில் 11 கிராம் சர்க்கரை உள்ள நிலையில், ஒருவர் 500 மி.லி. குடித்தால் 55 கிராம் சர்க்கரை உடலில் சேரும்.
இது ஒரு நாளின் பரிந்துரைக்கப்பட்ட உச்சவரம்பான 50 கிராமை விட அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்கு
டெல்லி உயர் நீதிமன்ற வழக்கும் $1.6 பில்லியன் இந்திய சந்தை வளர்ச்சியும்
முன்னதாக கடந்த ஜூன் மாதம் அதிக காஃபின் கொண்ட பானங்களில் 'எனர்ஜி டிரிங்க்' என்ற வார்த்தையை நீக்க FSSAI உத்தரவிட்டதை எதிர்த்து ரெட் புல், பெப்சிகோ, மான்ஸ்டர் மற்றும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடின.
இதில் ரெட் புல் இடைக்காலத் தடை பெற்றுள்ள நிலையில் புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2028-க்குள் $1.6 பில்லியன் மதிப்பை எட்டவுள்ள இந்திய எனர்ஜி டிரிங்க் சந்தையில், 2024-ல் மட்டும் ரெட் புல் $130 மில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.