ஒற்றை தலைவலியிலிருந்து நிவாரணம் பெற சில உணவு டிப்ஸ்
ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நரம்பியல் நோயாகும். இது பொதுவாக தலையின் ஒரு பக்கத்தில் மிதமான அல்லது கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. இது சாதாரண தலைவலி போன்றது அல்ல. ஒற்றைத் தலைவலி என்பது சில மணிநேரங்கள் முதல் நாட்கள் வரை நீடிக்கும். ஆண்டுதோறும், உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களை ஒற்றைத் தலைவலி தாக்குகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மிகவும் பொதுவான நரம்பியல் நிலைகளில் ஒன்றாகும். எனினும், ஒற்றைத் தலைவலிக்கு எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும், மருந்துகள் உட்கொள்வதால் அவற்றின் தீவிரதன்மையிலிருந்து ஓரளவிற்கு விடுபடலாம். அதோடு, அமைதியான மற்றும் இருண்ட அறையில் ஓய்வெடுப்பது, நிறைய தண்ணீர் குடிப்பது அல்லது ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது ஆகியவை அதன் அறிகுறிகளைப் போக்க உதவும்.
ஒற்றைத் தலைவலியைக் கட்டுப்படுத்த உணவுமுறை மாற்றங்கள்
உப்பு, சர்க்கரை மற்றும் ஆல்கஹால் ஆகியவை சிலருக்கு ஒற்றை தலைவலியை தூண்டும். ஆதலால் அவற்றை குறைப்பது நல்லது. சீஸ், சாக்லேட், காபி, கோக் மற்றும் சிட்ரஸ் பழங்களும் ஒற்றை தலைவலி இருப்பவர்களுக்கு சற்று டேஞ்சரான சமாச்சாரங்கள். ஒற்றை தலைவலியை சரி செய்ய நேரம் தவறாமல் உணவு உட்கொள்ள வேண்டும். கீரை, பாகற்காய், பாதாம், சியா விதைகள், வாழைப்பழங்கள் போன்ற மெக்னீசியம் நிறைந்த சில உணவுகள், ஒற்றை தலைவலியை தவிர்க்க உதவும். மீன், சியா விதைகள் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற உணவுகளில் காணப்படும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை தலைவலியின் தீவிரத்தை குறைக்கும். ஒற்றைத் தலைவலியை தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் உறுதி செய்யவேண்டும்.