மாலத்தீவுக்கு மீண்டும் விமான முன்பதிவுகளை தொடங்கியது ஈஸ்மைடிரிப் பயண நிறுவனம்
பயண தொழில்நுட்ப தளமான ஈஸ்மைடிரிப் (EaseMyTrip) மாலத்தீவிற்கு விமான முன்பதிவுகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இது இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்திற்குப் பிறகு, மூன்று மாலத்தீவு அமைச்சர்கள் அவரைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்ட பிறகு ஏற்பட்ட ராஜாங்க ரீதியிலான மோதலைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் இந்த முன்பதிவுகளை நிறுவனம் இடைநிறுத்தியது. ஈஸ்மைடிரிப் தலைமை நிர்வாக அதிகாரி நிஷாந்த் பிட்டி, இந்தியா-மாலத்தீவு இராஜதந்திர உறவுகளில் சாதகமான முன்னேற்றங்களை மேற்கோள் காட்டி, முன்பதிவுகளை மீண்டும் தொடங்கும் முடிவை உறுதிப்படுத்தினார்.
மீண்டும் முன்பதிவைத் தொடங்கும் முடிவின் பின்னணி
மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் பிரதிநிதிகள் சமீபத்தில் இந்தியா வந்தபோது அவர்களுடன் மேற்கொண்ட ஆக்கபூர்வமான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். "நாட்டின் முதல் நிறுவனமாக இருப்பதால், நாங்கள் எப்போதும் எங்கள் அரசாங்கத்துடன் ஒத்துப்போகிறோம் மற்றும் அவர்களின் பார்வைக்கு ஆதரவளிக்கிறோம்." என்று பிட்டி கூறினார். சுற்றுலா மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். சீனாவுக்கு சார்பானவர் என அறியப்படும் முகமது முய்சு கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக பதவியேற்றதில் இருந்தே, இரு நாட்டு உறவுகளும் மோசமடைந்தது. எனினும், கடந்த சில மாதங்களாக உறவை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடன் இணக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.