Loading...
BMI சரியாக இருந்தாலும் ஆபத்து வரலாம்! இதய ஆரோக்கியம் குறித்து டாக்டர் ஸ்ரீராம் நேனே அளித்த அதிர்ச்சி விளக்கம்
இதய ஆரோக்கியம் குறித்து டாக்டர் ஸ்ரீராம் நேனே அளித்த அதிர்ச்சி விளக்கம்

BMI சரியாக இருந்தாலும் ஆபத்து வரலாம்! இதய ஆரோக்கியம் குறித்து டாக்டர் ஸ்ரீராம் நேனே அளித்த அதிர்ச்சி விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 10, 2026
06:38 pm

செய்தி முன்னோட்டம்

ஒருவருக்கு உடல்பருமன் இல்லாமல் சாதாரண உடல் எடை (Normal BMI) அல்லது ரத்தப் பரிசோதனை முடிவுகள் இயல்பாக இருப்பதால் மட்டும் அவர் முழுமையான இதய ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது எனப் பிரபல மருத்துவர் ஸ்ரீராம் நேனே எச்சரித்துள்ளார். உடலின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து மட்டும் இதயத்தின் உண்மையான ஆரோக்கியத்தைக் கணிக்க முடியாது என்றும், பிஎம்ஐ கணக்கீட்டால் உறுப்புகளைச் சுற்றிப் படிந்துள்ள அபாயகரமான கொழுப்பை கண்டறிய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் சமீபத்தில் வெளியிட்ட தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

பரிசோதனைகள்

குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளின் உண்மை நிலை

வெறும் வயிற்றில் எடுக்கப்படும் ஃபாஸ்டிங் குளுக்கோஸ் சோதனை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தின் சர்க்கரை அளவை மட்டுமே காட்டும் ஒரு புகைப்படத்தின் ஒரே ஒரு ஃபிரேம் போன்றது எனக் கூறியுள்ள அவர், நீண்டகால ரத்த சர்க்கரை அளவை அறிய HbA1c பரிசோதனை அவசியம் என்றார்.

அதேபோல், ரத்தப் பரிசோதனையில் டோட்டல் கொலஸ்ட்ரால் அளவு சரியாக இருந்தால் மட்டும் போதாது என்றும், LDL-C, Non-HDL-C மற்றும் ட்ரைகிளிசரைடுகள் போன்ற பல குறிகாட்டிகளையும் கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதய நோய்

இதய நோய் அபாயம் என்பது பல காரணிகளின் அடுக்கு

இதய நோய் அபாயம் என்பது ஒரே ஒரு பரிசோதனை எண்ணால் தீர்மானிக்கப்படுவதில்லை என்று விளக்கிய டாக்டர் நேனே, பரம்பரை பின்னணி, ரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் புகையிலைப் பழக்கம் போன்ற பல காரணிகள் ஒன்றிணைந்தே ஒருவரது உண்மையான உடலநல அபாயத்தைத் தீர்மானிக்கின்றன என்றார்.

இதனால் ஒரே மாதிரியான பரிசோதனை முடிவுகள் இருவேறு நபர்களுக்கு முற்றிலும் வெவ்வேறு அர்த்தங்களை உணர்த்தக் கூடும் என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

உரையாடல் அவசியம்

அதிகமான பரிசோதனைகள் தீர்வல்ல, சரியான உரையாடலே அவசியம்

பரிசோதனைகள் பல இருக்கின்றன என்பதற்காக தேவையற்ற சோதனைகளை செய்ய வேண்டியதில்லை என்றும், மருத்துவரோடு கலந்தாலோசித்து தனிப்பட்ட உடல்நிலைக்கேற்ப அபாயங்களை மதிப்பிடுவதே சரியானது என்றும் அவர் கூறியுள்ளார்.

சிஏசி (CAC), ஏபிஓபி (ApoB), எல்பி(ஏ) [Lp(a)], ஈசிஜி (ECG) மற்றும் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் போன்ற மேம்பட்ட பரிசோதனைகளை தேவைப்படும் நபர்கள் மட்டுமே செய்ய வேண்டும்.

அறிக்கைகள் இயல்பாகக் காட்டினாலும் ஆழமாக பரிசோதித்து சரியான மருத்துவ ஆலோசனையைப் பெறுவதே பாதுகாப்பானது.

ADVERTISEMENT