கொலாஜன் முகமூடிகள் இளமை சருமத்திற்கான வரமா? மாயையா?
கொலாஜன் முகமூடிகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக சமீப காலமாக அழகு நிலையங்களிலும், அழகியல் நிபுணர்கள் பலரும் பரிந்துரைப்பதை அறிந்திருப்பீர்கள். கொலாஜெனின் ஆற்றல் காரணமாக சரும பராமரிப்புத் துறையில் இதன் பயன்பாடு பிரபலமாகியுள்ளது. சரும அமைப்பு மற்றும் நெகிழ்ச்சிக்கு காரணமான ஒரு அடிப்படை புரதம் தான் இந்த கொலாஜன். கொலாஜன் என்பது நமது உடலால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் புரதமாகும். இந்த சுரப்பு வயதுக்கு ஏற்ப இயற்கையாகவே குறைகிறது. இதன் விளைவாகவே சுருக்கங்கள், கோடுகள் மற்றும் சருமம் அதன் உறுதியை இழக்கிறது. அழகியல் துறையில் தரப்படும் ஃபேஸ் மாஸ்குகள் இந்த கொலாஜனை நேரடியாக தோலின் மேற்பரப்பிற்கு வழங்குவதற்காக உருவாக்கப்படுகின்றன.
கொலாஜனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வயதாகும்போது, கொலாஜன் உற்பத்தி குறைந்து, சுருக்கங்கள் தோன்றுவதற்கும், சருமத்தின் உறுதியை இழப்பதற்கும் வழிவகுக்கிறது. கொலாஜன் முகமூடிகள் பொதுவாக, ஹைட்ரோலைஸ் செய்யப்பட்ட கொலாஜன் போன்ற பொருட்களைக் கொண்டிருக்கின்றன. அவை தோலில் எளிதாக உறிஞ்சுவதற்கு சிறிய துகள்களாக உடைக்கப்படுகின்றன. அவை உங்கள் சருமம் இழந்த கொலாஜனை நிரப்பவும், தோல் அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. கொலாஜன் ஃபேஸ் மாஸ்க் பயன்பாட்டிற்குப்பிறகு தற்காலிகமான வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக, சருமம் மென்மையான தோற்றத்தை பெறுகிறது. ஃபேஸ் மாஸ்க்கில் உள்ள ஈரப்பதம் மற்றும் பொருட்கள், மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை தற்காலிகமாக நிரப்ப உதவும். இதனால் அவை குறைவாக வெளியில் தெரியும். இருப்பினும், இந்த விளைவுகள் தற்காலிகமானது என்பதை மறக்கவேண்டாம்.
வரையறுக்கப்பட்ட சரும ஊடுருவல்
கொலாஜெனின் செயல்பாட்டில் சிறிய முன்னேற்றம் சருமத்தில் தோன்றினாலும், ஃபேஸ்மாஸ்குகளில் உள்ள கொலாஜன் மூலக்கூறுகள் பெரும்பாலும் தோலின் அடுக்குகளில் ஆழமாக ஊடுருவ முடியாத நிலையிலேயே இருக்கும். அவை நீரேற்றம் மற்றும் தற்காலிக குண்டேற்றம் போன்ற மேற்பரப்பு-நிலை நன்மைகளை வழங்கினாலும், தோலின் ஆழமான அடுக்குகளில் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுவதற்கான திறன் குறைவாகவே உள்ளது. அதேநேரத்தில் கொலாஜன் மாஸ்குகளின் செயல்திறன் நபருக்கு நபர் மாறுபடும் என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம். வயது, தோல் வகை, மரபியல் மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் போன்ற காரணிகள் கொலாஜன் சிகிச்சைகளுக்கு சருமம் எவ்வளவு நன்றாக ரியாக்ட் செய்கிறது என்பதில் பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட தோல் நிலைகள் அல்லது ஒவ்வாமை உள்ள நபர்கள், கொலாஜன் மாஸ்குகளை பயன்படுத்துமுன், தோல் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.