பிளாக் ஃப்ரைடே- வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை
அமெரிக்க கலாச்சாரத்தில் தேங்க்ஸ் கிவ்விங் வியாழக்கிழமைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையை, பிளாக் ஃப்ரைடே என மக்கள் கொண்டாடுகிறார்கள். இது, எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான பொருட்கள் வாங்கும் காலத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. இதற்காக தேங்க்ஸ் கிவ்விங் அன்று இரவே பெரும்பாலான கடைகள் விற்பனைக்கு தயாராகிவிடும். அமெரிக்காவில் பிளாக் ஃப்ரைடே என்றுமே பரபரப்பான பொருட்கள் விற்பனையாகும் நாளாக உள்ளது. ஆனால், ஏன் இது பிளாக் ஃப்ரைடே என்று அழைக்கப்படுகிறது, தேங்க்ஸ் கிவ்விங் என்றால் என்ன என்பது குறித்த தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
தேங்க்ஸ் கிவ்விங் என்றால் என்ன?
அமெரிக்காவில் பூர்வ குடிமக்களும், ஐரோப்பியாவில் இருந்து வந்த குடியேறியவர்களும், சண்டையை விட்டு, சமாதானம் அடைந்து, நல்லுறவை ஏற்படுத்திக்கொண்ட நாளே தேங்க்ஸ் கிவ்விங் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த நாளில், மக்கள் வான்கோழி சமைத்து உண்டதால், இந்த பழக்கம் பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழக்கிழமை, தேங்க்ஸ் கிவ்விங் நாளாக கொண்டாடப்படுகிறது. இதில் மக்கள், வான்கோழி சமைத்து, பூசணிக்காய் அல்வா மற்றும் உருளைக்கிழங்கு உணவு வகைகளுடன் கொண்டாடுகிறார்கள். தேங்க்ஸ் கிவ்விங் அன்று அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில், வான்கோழிகளுக்கு மன்னிப்பு சடங்கு செய்து, கொலை தண்டனையில் இருந்து தப்பிய வான்கோழிகளை, நாட்டில் உள்ள ஏதாவது சரணாலயத்தில் விடுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ப்ளாக் ஃப்ரைடே என்றால் என்ன?
தேங்க்ஸ் கிவ்விங் நாளுக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை ப்ளாக் ஃப்ரைடேவாக மக்கள் கொண்டாடுகிறார்கள். அதன்படி இன்று, அமெரிக்கா முழுவதும் ப்ளாக் ஃப்ரைடே கடைபிடிக்கப்படுகிறது. பிளாக் ஃப்ரைடே உருவானது குறித்து பல தவறான கருத்துக்கள் உள்ளன. சில்லறை விற்பனையாளர்கள் நஷ்டம் அடைவதை நிறுத்திவிட்டு, ஷாப்பிங் செய்பவர்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்கத் தொடங்கியதால், பிளாக் ஃப்ரைடேவிற்கு அதன் பெயர் வந்தது என்று பலர் நினைக்கிறார்கள். நல்ல விற்பனைகள் பெரிய லாபத்திற்கு வழிவகுக்கும் என்று மக்கள் கருதினர், ஏனெனில் இலாபங்கள் கருப்பு நிறத்திலும், இழப்புகள் சிவப்பு நிறத்திலும் பதிவு குறிக்கப்படுகின்றன. இருப்பினும், பிளாக் ஃப்ரைடேவிற்கும், பொருட்கள் வாங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வதந்திகள் உள்ளன.
ப்ளாக் ஃப்ரைடே பெயர் எவ்வாறு வந்தது?
உண்மையில், பிளாக் ஃப்ரைடேவிற்கு அதன் தற்போதைய பெயரை வழங்கிய பெருமை பிலடெல்பியா மாகாண காவல்துறையையே சாரும். பிளாக் ஃப்ரைடே என்பது 1950களில் பிலடெல்பியா காவல்துறையினரால், தேங்க்ஸ் கிவ்விங்க்கு அடுத்த நாளில் ஏற்படும் குழப்பத்தை விவரிக்க உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில், நூற்றுக்கணக்கான வெளியூர் பார்வையாளர்கள் கால்பந்து விளையாட்டிற்காக நகருக்குள் வருவது அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியதால், காவல்துறையினர் அதனை கருப்பு வெள்ளியாக கருதியதாக கூறப்படுகிறது. பிளாக் ஃப்ரைடே என்பதை சில பெருநகர வணிகர்கள், கடைக்கு வெளியில் நிற்கும் நீண்ட வரிசைகளை குறிக்கவும் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. வணிகர்கள் 1961இல் பிளாக் ஃப்ரைடேவின் பெயரை மாற்றம் என்று தோல்வியையே தழுவினர். 2013 ஆம் ஆண்டு முதல் ப்ளாக் ஃப்ரைடே உலகம் முழுவதும் அறியப்படுகிறது.
பிளாக் ஃப்ரைடேவின் முக்கியத்துவம்
வருடாந்திர ஷாப்பிங் திருவிழாவான ப்ளாக் ஃப்ரைடே, மிகப்பெரிய கலாச்சார மற்றும் பொருளாதார நிகழ்வாகும். வாடிக்கையாளர்கள், பிளாக் ஃப்ரைடேவை முன்னிட்டு வழங்கப்படும் தள்ளுபடிகளுக்காக காத்திருப்பர். அதே சமயம் வணிகர்களும், அதிக பொருட்கள் விற்பனையாவதின் மூலம் நிறைய லாபம் கிடைக்கும் என்பதால் அவர்களும் இந்த நாளை எதிர்பார்த்து இருப்பர். சமீபத்திய நாட்களில் அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இந்த நாள் பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. இது நுகர்வோர் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுகிறது மற்றும் பொருட்கள் வாங்குவதில் அவசர உணர்வை உருவாக்குகிறது என குறிப்பிடத்தக்கது.