
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்; 4 நாட்கள் நடைபெறுகிறது
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், சபாநாயகர் அப்பாவு, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். அவையின் அடிப்படை விதிகளின்படி, ஆறு மாத கால இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டத்தொடர் கூட்டப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், நடப்பு ஆண்டின் இரண்டாவது கூட்டத்தொடர் இதுவாகும். முதல் கூட்டம் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் விவாதங்கள், துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் எனப் பல கட்டங்களாக நடைபெற்றது.
மானியக் கோரிக்கை
மானியக் கோரிக்கை விவாதம்
நாளை தொடங்கும் கூட்டத்தொடரின் முதல் நாளில், மறைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல. கணேசன், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். மேலும், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், வால்பாறை தொகுதி எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அக்டோபர் 15 ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் முன்வைக்கப்படும். விவாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 17 ஆம் தேதி முதலமைச்சர் இதற்குப் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.