மதுரை சமையலர்களைப் பாராட்டிய 'மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா' கேரி மெஹிகன்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரும், உலகப் புகழ்பெற்ற மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சியின் முக்கியத் தேர்வாளர்களுள் ஒருவருமான கேரி மெஹிகனின் மதுரை பன் பரோட்டா குறித்த இன்ஸ்டாகிராம் பதிவொன்று தற்போது வைரலாகியிருக்கிறது. கடந்த மே மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு இந்திய சுவைகளை சுவைத்திருக்கிறார் கேரி மெஹிகன். அப்போது மதுரையிலும் பல்வேறு சாலையோர உணவகங்களுக்குச் சென்று உணவருந்தியிருக்கிறார் அவர். அப்படி மதுரையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தச் சென்ற போது, அங்கிருந்த சமையலர்கள் பரோட்டா செய்வதை காணொளியாகப் பதிவு செய்து, அதனைத் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் அவர். அந்தக் காணொளியே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரி மெஹிகனின் இன்ஸ்டா பதிவு:
தன்னுடைய பதிவில் பன் பரோட்டாவை செய்யும் சமயலர்களின் திறனை பாராட்டிக் குறிப்பிட்டிருக்கிறார் கேரி. இந்தப் பதிவு மட்டுமின்றி, இதற்கு முன்பு மதுரையின் பல சாலையோர உணவகங்களில் தான் சாப்பிட்ட உணவுகளையும் இது போன்ற இன்ஸ்டாகிராமில் காணொளிப் பதிவாகப் பதிவிட்டிருக்கிறார் அவர். மதுரை மீனாட்சி பவனில் ஸ்பெஷல் ரவா தோசை, சரபேஸ்வரர் கோவில் அருகில் உள்ள சிறிய தள்ளுவண்டிக் கடையில் முள்ளு முருங்கை வடை, அதனைத் தொடர்ந்து ராகி வடை மற்றும் கேசரி போலி ஆகிய உணவுகளை சுவைத்து அது குறித்து பதிவும் இட்டிருக்கிறார் கேரி மெஹிகன். மதுரையின் உணவு குறித்து அவர் பதிவிட்ட பதிவுகள் அனைத்தும், இந்தப் புதிய பதிவைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வைரலாகியிருக்கிறது.