Page Loader
ஒருமணி நேரத்தில் அதிக புஷ்-அப்; கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலியர் டேனியல் ஸ்காலி
ஒருமணி நேரத்தில் அதிக புஷ்-அப் செய்து கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலியர் டேனியல் ஸ்காலி

ஒருமணி நேரத்தில் அதிக புஷ்-அப்; கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலியர் டேனியல் ஸ்காலி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 14, 2023
05:39 pm

செய்தி முன்னோட்டம்

30 வயதான ஆஸ்திரேலிய உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய ஆர்வலரான டேனியல் ஸ்காலி, ஒரு மணி நேரத்தில் அதிக புஷ்-அப்களை முடித்தவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். டேனியல் ஸ்காலி 3,249 புஷ்-அப்களை வெற்றிகரமாக முடித்தார். முன்னதாக நவம்பர் 2022 இல் சக ஆஸ்திரேலியரான லூகாஸ் ஹெல்ம்கே 3,206 புஷ்-அப்களை எடுத்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், அதை முறியடித்துள்ளார். ஸ்காலி இதற்கு முன்பு ஏப்ரல் 2022 இல் 3,182 புஷ்-அப்களுடன் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கின்னஸ் சாதனைக்கு, முழங்கைகள் 90 டிகிரி கோணத்தை அடையும் வரை உடலைத் தாழ்த்தி, பின்னர் கைகள் நேராக இருக்கும் வரை மீண்டும் மேலே உயர்த்தப்படும் போது புஷ்-அப் முழுமையானதாகக் கருதப்படுகிறது.

daniel scali facing CRPS disease

அரியவகை நோயுடன் போராடும் டேனியல் ஸ்காலி

டேனியல் ஸ்காலி 12 வயதாக இருக்கும்போது டிராம்போலைனில் இருந்து விழுந்ததில் அவரது இடது கையில் கடுமையான முறிவு ஏற்பட்டது. அப்போதிலிருந்து, மனித குலத்தின் கடுமையான நோய்களில் ஒன்றான 'சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறி' பாதிப்பை கொண்டுள்ளார். இந்த நோய் உள்ளவர்களுக்கு, உடலின் எந்த பாகத்தில் நோய் உள்ளதோ, அதை மெதுவாக தொட்டால் கூட, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வலி இருக்கும். இந்த நோய்க்கான சிகிச்சை முறை தற்போதுவரை மருத்துவ உலகால் கண்டறியப்படவில்லை. ஒருபுறம் இத்தகைய தடைகளை எதிர்கொண்ட போதிலும், ஸ்காலியின் அசைக்க முடியாத உறுதியானது அவரது உடற்பயிற்சி முயற்சிகளில் அசாதாரண வெற்றிக்கு வழிவகுத்தது. வலியைக் குறைக்க ஸ்கேலி சுருக்கப்பட்டை அணிந்து புஷ்-அப்பில் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.