ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோவில் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இது அந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரியதாகும். இன்று திறக்கப்பட்ட போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா(BAPS) கோவில் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) முதல் இந்து கோவிலாகும். துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் இருக்கும் அல் ரஹ்பாவிற்கு அருகில் உள்ள அபு முரைக்காவில் இந்த கல் கோவில் அமைந்துள்ளது. போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் இந்து மந்திர் அல்லது BAPS இந்து மந்திர் 27 ஏக்கர் நிலத்தில் பரவியுள்ளது.
BAPS இந்து கோவிலின் அம்சங்கள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வழங்கிய நிலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் கோயில் கட்டுவதற்காக 13.5 ஏக்கர் நிலத்தை அவர் நன்கொடையாக வழங்கினார். 2019 ஆம் ஆண்டில், அவர் கூடுதலாக 13.5 ஏக்கரை அந்த கோவிலுக்காக பரிசளித்தார். BAPS இந்து கோவிலின் திறப்பு விழா 12 நாட்கள் 'நல்லிணக்கத்தின் திருவிழா' மூலம் கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டம் பிப்ரவரி 10 அன்று தொடங்கி பிப்ரவரி 21 வரை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நிகழ்வுகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். BAPS இந்து மந்திரின் அடித்தளம் ஏப்ரல் 2019இல் அமைக்கப்பட்டது. அதன் கட்டுமானம் அதே ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.