இந்தியாவில் அறிகுறிகளே இல்லாமல் 15 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு: இருமல், காய்ச்சல் இல்லாமலும் TB வருமா?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனைகளில், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற எவ்வித வெளிப்படையான அறிகுறிகளும் இல்லாமல் சுமார் 15 லட்சம் பேருக்கு (14.97 லட்சம்) காசநோய் இருப்பது கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தத் தரவுகளின்படி, 'டிபி முக்த் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் 25 கோடிக்கும் அதிகமானோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட மொத்த நோயாளிகளில் 31 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
காசநோய்
இந்தியாவில் எவ்வித அறிகுறியும் இல்லாமல் 15 லட்சம் பேருக்கு காசநோய் உறுதி
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 2024 டிசம்பர் முதல் 2026 நவம்பர் வரை 'டிபி முக்த் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் 25 கோடிக்கும் அதிகமானோருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் கண்டறியப்பட்ட 48.64 லட்சம் புதிய காசநோயாளிகளில், 14.97 லட்சம் பேருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற எவ்வித அறிகுறிகளும் இல்லை.
11 கோடி மார்பு எக்ஸ்-ரே மற்றும் 3 கோடி மூலக்கூறு சோதனைகள் மூலமே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அசிம்ப்டோமேடிக் காசநோய்
இருமல், காய்ச்சல் இல்லாமல் ஏற்படும் அசிம்ப்டோமேடிக் காசநோய் என்றால் என்ன?
வழக்கமாக காசநோய் பாதிப்பு ஏற்பட்டால் தொடர் இருமல், காய்ச்சல், இரவில் வியர்த்தல் மற்றும் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
ஆனால் அசிம்ப்டோமேடிக் டிபி (Asymptomatic TB) நிலையில், நோயாளியின் நுரையீரலில் காசநோய் கிருமிகள் தீவிரமாக செயல்பட்டாலும் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை.
இது உடலில் கிருமி செயலற்று இருக்கும் 'லேட்டன்ட் டிபி' (Latent TB) போன்றது அல்ல.
மாறாக இது நுரையீரல் திசுக்களைப் பாதிக்கும் உண்மையான நோயாகும் என்பதால் மார்பு எக்ஸ்-ரே மூலம் இதனைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
அபாயம்
இருமல் இல்லாத நோயாளிகளாலும் மற்றவர்களுக்கு காசநோய் பரவும் அபாயம்
இருமல் இல்லாத நபர்களால் காசநோய் பரவாது என்ற எண்ணம் தவறானது என மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
கேப்டவுன் பல்கலைக்கழக ஆய்வின்படி, ஒரு நோயாளி சாதாரணமாக மூச்சுவிடுவதன் மூலமே ஒரு நாளில் வெளியாகும் 90 சதவீதத்திற்கும் அதிகமான காசநோய் பாக்டீரியாக்கள் காற்றில் கலக்கின்றன.
அறிகுறிகள் இல்லாத நபர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் நீண்ட காலம் சிகிச்சை பெறாமல் இருப்பதால், இவர்கள் மூலமாகவே சமூகத்தில் அதிக அளவில் காசநோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக லான்செட் ஆய்விதழ் எச்சரிக்கிறது.
உயிரிழப்பு விகிதம் சரிவு
முழுமையான சிகிச்சையும் காசநோய் உயிரிழப்பு விகிதத்தில் 38% சரிவும்
அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சாதாரண காசநோய்க்கு வழங்கப்படும் அதே முழுமையான மருந்து சிகிச்சையை இவர்களும் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நலமாக இருப்பதாக நினைத்து இடையில் மருந்துகளை நிறுத்தினால் மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோயாக மாறும் அபாயம் உள்ளது.
இந்தியாவில் காசநோய் சிகிச்சை வெற்றி விகிதம் 94 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் 2015-ல் ஒரு லட்சம் பேருக்கு 28 ஆக இருந்த காசநோய் உயிரிழப்பு விகிதம், 2025-ல் 18 ஆகக் குறைந்து 38 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.