"உலகிற்கு தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்பம் சார்ந்த அரசுகள் தேவை": பிரதமர் மோடி
துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதிற்கு தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் அவசியம் என்று அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பிரதமர் மோடி தனது உரையின் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத்தின் ஆற்றல்மிக்க தலைமையை பாராட்டியதோடு, அவரை தொலைநோக்கு மிக்க தீர்க்கமான தலைவர் என்று விவரித்தார். "தற்போது உலகிற்கு ஒரு ஸ்மார்ட் அரசாங்கம் தேவை. அது தொழில்நுட்பத்தை ஊடகமாக கொண்டு, வெளிப்படையான மற்றும் ஊழல் இல்லாததாக செயல்பட வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
'பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் எனது அரசு கவனம் செலுத்துகிறது': பிரதமர் மோடி
"ஒருபுறம், உலகம் நவீனத்துவத்தை தழுவுகிறது. மறுபுறம், கடந்த நூற்றாண்டில் இருந்து எழும் சவால்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உணவு பாதுகாப்பு, சுகாதார பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, கல்வி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதோடு, ஒவ்வொரு அரசாங்கமும் அதன் குடிமக்களுக்கு பல பொறுப்புகளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறது" என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி கூறினார். சமூக மற்றும் நிதி நிலைமைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 2015 முதல் 6 முறை பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றுள்ளார். இது அவரது 6வது பயணமாகும்.