இந்தியாவில் ஏழு ஆண்டுகளில் இரட்டிப்பாகிய 'ஒர்கிங் வுமன்' எண்ணிக்கை; எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது என ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, மாநிலங்களவையில் திமுக உறுப்பினரான கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதில் அளித்தார். அதன்படி, "2017-18 ஆண்டில் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 22% ஆக இருந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டில் 40.3% ஆக உயர்ந்துள்ளது" என்றார்.
பெண்களுக்கு 7 ஆண்டுகளில் குறைந்த வேலைவாய்ப்பின்மை
2017-18இல் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்படும் பெண்களின் சதவீதம் 22.3% இருந்து 2023-24இல் 41.7% ஆக அதிகரித்துள்ளது. 2017-18 இல் 5.6% இருந்த பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம், தற்போது 3.2% ஆக குறைந்துள்ளது. மேலும், 2017-18ல் 34.5% இருந்த முதுகலை மேல்படிப்பு முடித்த பெண்களின் சதவீதம், தற்போது 39.6% ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.
வேலைக்கு செல்லும் பெண்களின் விகிதத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம் சிக்கிம்
இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் ஒன்றிய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளதையும், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்களையும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார். மேலும், வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீத பட்டியலில் சிக்கிம் (66.8%), மேகாலயா (65.9%), அருணாசல பிரதேசம் (62.4%) மற்றும் இமாச்சல பிரதேசம் (62.3%) ஆகிய மாநிலங்கள் முன்னணி இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 2021-22ஆம் ஆண்டில் 39.1%, 2022-23இல், 38.6%, 2023-24ஆம் ஆண்டில் 41.5% ஆக பதிவாகியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.