LOADING...
ஜிஎஸ்டி மோசடி வழக்கில் பினோ வங்கி சிஇஓ ரிஷி குப்தா திடீர் கைது! ரூ.3,000 கோடி பெட்டிங் பின்னணி
பினோ பேமெண்ட்ஸ் வங்கி சிஇஓ ரிஷி குப்தா ஜிஎஸ்டி மோசடி வழக்கில் கைது

ஜிஎஸ்டி மோசடி வழக்கில் பினோ வங்கி சிஇஓ ரிஷி குப்தா திடீர் கைது! ரூ.3,000 கோடி பெட்டிங் பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Feb 28, 2026
10:02 am

செய்தி முன்னோட்டம்

பினோ பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் சிஇஓவுமான ரிஷி குப்தா, ஜிஎஸ்டி சட்ட விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஹைதராபாத் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 27, 2026 அன்று அதிகாலையில் மும்பையில் வைத்து அவர் பிடிப்பட்டார். இது குறித்து வங்கி தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்த விசாரணை வங்கியின் வணிக கூட்டாளிகள் தொடர்பானதே தவிர, வங்கியின் ஜிஎஸ்டி விதிமுறை இணக்கம் சார்ந்தது அல்ல" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் வங்கியின் வேறு எந்த அதிகாரிகளுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி

3,000 கோடி ரூபாய் பெட்டிங் மோசடி பின்னணி

இந்தக் கைது நடவடிக்கை சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆன்லைன் பெட்டிங் தொடர்பான ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் கேமிங் மற்றும் பெட்டிங் ஆப்கள் மூலம் ஈட்டப்பட்ட நிதியை, போலியான நிறுவனங்கள் மற்றும் இன்வாய்ஸ்கள் மூலம் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த வலையமைப்பில் சுமார் 13,000 கோடி ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த முறைகேட்டில் வங்கியின் சில வணிக கூட்டாளிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து ரிஷி குப்தாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இடைக்காலத் தலைவர்

இடைக்காலத் தலைவராக கேதன் மெர்ச்சண்ட் நியமனம்

ரிஷி குப்தாவின் கைதைத் தொடர்ந்து, வங்கியின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க வங்கியின் வாரியம் அவசரக் கூட்டத்தைக் கூட்டியது. இதில், வங்கியின் தலைமை நிதி அதிகாரி கேதன் மெர்ச்சண்ட், வங்கியின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷி குப்தா மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை அல்லது வாரியம் அடுத்த கட்ட முடிவை எடுக்கும் வரை கேதன் மெர்ச்சண்ட் வங்கியின் அன்றாடச் செயல்பாடுகளைக் கவனிப்பார். இந்தச் சம்பவத்தால் வங்கியின் சேவைகளில் எந்தத் தடங்கலும் இருக்காது என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பொருளாதாரத் தாக்கம்

பொருளாதாரத் தாக்கம் மற்றும் நிபுணர்களின் கவலை

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் பினோ பேமெண்ட்ஸ் வங்கியின் பங்குகள் சுமார் 7.5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. சமீபத்தில்தான் இந்த வங்கி சிறு நிதி வங்கியாக மாறுவதற்கு ரிசர்வ் வங்கியிடம் முதற்கட்ட அனுமதியைப் பெற்றிருந்தது. இத்தகைய சூழலில் சிஇஓ கைது செய்யப்பட்டுள்ளது வங்கித் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் இவ்வளவு விரைவாகக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து சில சட்ட வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement