LOADING...
நிலவுக்கு செல்வதில் சிக்கல்! ஆர்ட்டெமிஸ் திட்டத்தை அதிரடியாக மாற்றியது நாசா
ஆர்ட்டெமிஸ் நிலவுத் திட்டத்தில் அதிரடி மாற்றம்

நிலவுக்கு செல்வதில் சிக்கல்! ஆர்ட்டெமிஸ் திட்டத்தை அதிரடியாக மாற்றியது நாசா

எழுதியவர் Sekar Chinnappan
Feb 28, 2026
10:19 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் தனது ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் காலதாமதங்கள் காரணமாக, 2028 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்கர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன் ஏவப்பட வேண்டிய ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம், ஏவுகணையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள்

ஆர்ட்டெமிஸ் 3 மற்றும் 4 திட்டங்களில் மாற்றங்கள்

புதிய திட்டத்தின்படி, ஆர்ட்டெமிஸ் 3 விண்கலம் நேரடியாக நிலவில் தடம் பதிப்பதற்குப் பதிலாக, பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் விண்கலங்களை இணைக்கும் ஒரு சோதனை முயற்சியாக மாற்றப்பட்டுள்ளது. இது விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த உதவும் என்று நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் உண்மையான இலக்கு ஆர்ட்டெமிஸ் 4 திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அணுகுமுறை

பேக் டு பேசிக்ஸ் - நாசாவின் புதிய அணுகுமுறை

முன்னதாக அப்பல்லோ திட்டத்தின் போது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை விண்கலங்கள் ஏவப்பட்டன. ஆனால் தற்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஏவப்படுவதால், தொழில்நுட்பத் திறன்களில் சுணக்கம் ஏற்படுவதாக ஐசக்மேன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனைச் சரிசெய்ய, ஏவுதல்களின் இடைவெளியைக் குறைத்து அடிக்கடி விண்கலங்களை ஏவ நாசா திட்டமிட்டுள்ளது. நாசாவின் தற்போதைய திட்டத்தில் அதிக அபாயங்கள் இருப்பதாக விண்வெளிப் பாதுகாப்பு ஆலோசனைக் குழு எச்சரித்ததைத் தொடர்ந்து, இந்த பேக் டு பேசிக்ஸ் (Back to basics) அணுகுமுறை கையாளப்படுகிறது.

Advertisement

விண்வெளிப் போட்டி

விண்வெளிப் போட்டியும் தனியார் நிறுவனங்களும்

சீனா தனது முதல் மனித விண்வெளிப் பயணத்தை 2030 க்குள் நிலவில் நிகழ்த்த இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அமெரிக்காவும் தனது வேகத்தை அதிகரித்துள்ளது. இந்த விண்வெளிப் போட்டி ஆரோக்கியமானது என்று நாசா கருதுகிறது. ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆர்ஜின் போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டங்களை நாசா செயல்படுத்தி வருகிறது. "அடிக்கடி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மட்டுமே நிலையான விண்வெளி இருப்பை உறுதி செய்யும்" என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், 2028 க்குள் நிலவில் தரையிறங்குவது சாத்தியமா என்பதில் இன்னும் சில சவால்கள் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement